தங்கம் வென்றார் பவானி தேவி: ஐஸ்லாந்து வாள் சண்டையில்
தங்கம் வென்றார் பவானி தேவி: ஐஸ்லாந்து வாள் சண்டையில்
ADDED : செப் 07, 2026 11:24 PM

ரேய்ஜவிக்: ஐஸ்லாந்து வாள் சண்டை தொடரில் தங்கம் வென்றார் பவானி தேவி.
ஐஸ்லாந்தின் ரேய்ஜவிக் நகரில் சர்வதேச வாள் சண்டை கூட்டமைப்பு சார்பில் 'டூர்னோய் சாட்டிலைட்' தொடர் நடந்தது. 13 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்களுக்கான சாப்ரே பிரிவில் இந்தியாவின் பவானி தேவி 33, (தமிழகம்) பங்கேற்றார்.
அரையிறுதியில் பவானி தேவி 15:12 என துருக்கியின் யுசெல் எமினேவை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த பைனலில் பவானி தேவி, லிதுவேனியாவின் ஜியாத்ரே ராஸ்கட்டை 15:7 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார்.
எட்டு பதக்கம்
கடந்த 2017ல் 'டூர்னோய் சாட்டிலைட்' தொடரில் தங்கம் வென்றார். தற்போது 9 ஆண்டுக்குப் பின் மீண்டும் இங்கு தங்கம் கைப்பற்றினார். தவிர, இத்தொடரில் தனிநபர் பிரிவில் ஒட்டுமொத்தமாக பவானி தேவி கைப்பற்றிய 8வது பதக்கம் இது. இதுவரை 2 தங்கம் (2017, 2026), 3 வெள்ளி(2018, 2019, 2025), 3 வெண்கலம் (2018, 2019, 2023)) வென்றுள்ளார்.
