/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
முற்றுகிறது எம்பாப்வே மோதல்
/
முற்றுகிறது எம்பாப்வே மோதல்
ADDED : நவ 18, 2025 10:44 PM

பாரிஸ்: பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே 26. கடந்த 2018 முதல் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) கிளப் அணிக்காக விளையாடினார் (178 போட்டி, 162 கோல்). அணியின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என 2022ல் நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதனால், 2023-24 சீசனில் 11 மாதம் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2024ல் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
இதனிடையே பி.எஸ்.ஜி., அணி, ஒப்பந்தப்படி தனக்கு ரூ. 2666 கோடி பாக்கி தர வேண்டும் என, பாரிஸ் தொழிலாளர் கோர்ட்டில் எம்பாப்வே வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கு 'விறுவிறு' கட்டத்தை எட்டியுள்ளது.
டேவிஸ் கோப்பை: அல்காரஸ் விலகல்
மாட்ரிட்: டேவிஸ் கோப்பை பைனல்ஸ் தொடர், இத்தாலியில் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஸ்பெயின், செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இதற்கான ஸ்பெயின் அணியில் இடம் பெற்றிருந்த உலகின் 'நம்பர்-1' வீரர் அல்காரஸ் 22, தொடையின் பின்பகுதி காயம் காரணமாக, விலகினார்.
அடிலெய்டை வென்றது ஹோபர்ட்
ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'பிக் பாஷ்' கிரிக்கெட் 'டி-20' தொடர் நடக்கிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. நேற்று ஹோபர்ட்டில் நடந்த லீக் போட்டியில் அடிலெய்டு, ஹோபர்ட் அணிகள் மோதின. இதில் ஹோபர்ட் அணி (136/6), அடிலெய்டை (134/7) 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கால்பந்து: காலிறுதியில் போர்ச்சுகல்
கத்தாரில் ஆண்கள் அணிகளுக்கான 'பிபா' உலக கோப்பை (17 வயதுக்கு உட்பட்ட) தொடர் நடக்கிறது. இதில் தற்போது 'நாக் அவுட்' ('ரவுண்டு-16') போட்டிகள் நடக்கின்றன. போர்ச்சுகல் அணி 5-0 என மெக்சிகோவை வென்றது. இத்தாலி 3-2 என உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின.
எக்ஸ்டிராஸ்
* இந்தியா வர இருந்த வங்கதேச பெண்கள் அணி, உலக சாம்பியன் இந்தியாவுடன் மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இருந்தது. தற்போது காரணம் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
* இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க 'ஏ' அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா 'ஏ', 2-0 என தொடரை வென்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது.
* ஸ்பெயினின் லினாரெஸ் நகரில் உலக பெண்கள் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் துவங்கியது. இதற்கான இந்திய அணியில் பத்மினி, ரக்சித்தா, சவிதா, நந்திதா, ஸ்ரீஜா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* கத்தாரில் டேக்வாண்டோ சர்வதேச ஓபன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்திய வீராங்கனை வைஷ்ணவே, ஜூனியர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
*தேசிய சீனியர் வாள்சண்டை சாம்பியன்ஷிப் டில்லியில் நடக்கிறது. ஆண்கள் சாப்ரே அணிகளுக்கான பைனலில் ஜம்மு அண்டு காஷ்மீர் அணி 45-38 என மகாராஷ்டிராவை வீழ்த்தி தங்கம் வென்றது. பெண்கள் 'எபீ' பிரிவு பைனலில் ஹரியானா அணி 45-24 என மகாராஷ்டிராவை சாய்த்து, தங்கம் வசப்படுத்தியது.
* சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், 2025ன் சிறந்த அம்பயராக இந்தியாவின் ரகு பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இவர் 198 போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். தவிர 33 முறை வீடியோ அம்பயராக பணிபுரிந்தார்.

