/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'தங்க மகன்' தரம்பிர் * பாராலிம்பிக் 'கிளப் த்ரோவில்' அசத்தல்...
/
'தங்க மகன்' தரம்பிர் * பாராலிம்பிக் 'கிளப் த்ரோவில்' அசத்தல்...
'தங்க மகன்' தரம்பிர் * பாராலிம்பிக் 'கிளப் த்ரோவில்' அசத்தல்...
'தங்க மகன்' தரம்பிர் * பாராலிம்பிக் 'கிளப் த்ரோவில்' அசத்தல்...
ADDED : செப் 05, 2024 11:07 PM

பாரிஸ்: பாராலிம்பிக் 'கிளப் த்ரோ' போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என சாதனை படைத்தார் தரம்பிர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 'கிளப் த்ரோ' போட்டியில் இந்தியா சார்பில் தரம்பிர், பிரனவ் சூர்மா, அமித் குமார் பங்கேற்றனர். முதலில் களமிறங்கிய தரம்பிர் 35, முதல் நான்கு வாய்ப்பை வீணடித்தார்.
ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 34.92 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தவிர, இது புதிய ஆசிய சாதனையாக அமைந்தது.
இதையடுத்து பாராலிம்பிக் 'கிளப் த்ரோ' போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார் தரம்பிர். முதல் வாய்ப்பில் 34.59 மீ., துாரம் எறிந்த பிரனவ் 29, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.
2017 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற அமித் குமார், இம்முறை 23.96 மீ., துாரம் மட்டும் எறிய, கடைசி இடம் (10 வது) பிடித்தார்.
பைனலில் சிம்ரன்
பார்வைத்திறன் குறைந்த பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் சர்மா 24, பங்கேற்றார். ஆசிய பாரா விளையாட்டில் 100, 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற இவர், உலக சாம்பியன்ஷிப் 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். இம்முறை தகுதிச்சுற்றில் இலக்கை 12.17 வினாடியில் அடைந்த சிம்ரன், அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 12.33 வினாடி நேரத்தில் வந்து பைனலுக்கு முன்னேறினார். பைனலில் 12.31 வினாடி நேரத்தில் வந்து, கடைசி இடம் (4வது) பிடித்தார்.
ஜூடோ: கபில் சாதனை
பாராலிம்பிக்கில் நேற்று நடந்த ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் கபில் பார்மர், 10-0 என வெனிசுலாவின் மார்கசை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் கபில், 0-10 என ஈரானின் சையதுவிடம் தோற்றார். இதையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கபில், பிரேசிலின் எலியல்டனை சந்தித்தார். இதில் 10-0 என வெற்றி பெற்றார் கபில். பாராலிம்பிக் ஜூடோ வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.
* பெண்களுக்கான ஜூடோ, காலிறுதியில் (48 கிலோ) இந்தியாவின் கோகிலா, 0-10 என கஜகஸ்தானின் அக்மரலிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த 'ரெப்பிசாஜ்' போட்டியிலும் இவர், 0-10 என உக்ரைனின்
யூலியாவிடம் தோல்வியடைந்தார்.
மீண்டது எப்படி
தரம்பிர் கால்வாயில் தவறுதலாக குதித்த போது காயம் ஏற்பட்டது. இதனால் இடுப்புக்கு கீழே செயலிழக்க, வாழ்க்கை திசைமாறியது. சக பாரா தடகள வீரர் அமித்குமார், தரம்பிரை பாரா விளையாட்டுக்கு கொண்டு வந்தார். அடுத்த இரு ஆண்டில் ரியோ பாராலிம்பிக்கில் (2016) பங்கேற்றார். 2023 ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி வென்றார். தற்போது சர்வதேச அரங்கில் முதன் முறையாக தங்கப்பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
* கிரிக்கெட், ரோலர் ஹாக்கி மீது ஆர்வம் கொண்டவர் பிரனவ் சூர்மா. இவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இடுப்புக்கு கீழ் பகுதி செயல் இழந்தது. மனம் தளராத பிரனவ், 2019, பீஜிங் கிராண்ட் பிரிக்ஸ், 2023 செர்பிய ஓபனில் தங்கம் வென்றார். ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற இவர், இம்முறை வெள்ளி கைப்பற்றினார்.
'கிளப் த்ரோ'
அதிகளவு உடல் திறன் பாதிக்கப்பட்டவர்கள் வட்டு, குண்டு எறிதலில் பங்கேற்க முடியாது. இதனால் ஒலிம்பிக்கில் உள்ள 'ஹாம்மர் த்ரோ' போல, பாராலிம்பிக்கில் 'கிளப் த்ரோ' போட்டி கொண்டு வரப்பட்டது.
இடுப்புக்கு கீழ் பகுதி பாதிக்கப்பட்டு, கால், கைளில் அதிக பலம் இல்லாதவர்கள், உட்கார்ந்த நிலையில் போட்டியில் பங்கேற்பவர். மரத்தினால் ஆன, சுமார் 35 முதல் 39 செ.மீ., நீளம், 6 செ.மீ., அகலம் கொண்ட நீண்ட உருளை வடிவ 'கிளப்பை' எறிவர்.
25
பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா முதன் முறையாக அதிக பதக்கம் வென்றது. பாரிசில் இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக டோக்கியோவில் இந்தியா 19 பதக்கம் (5-8-6) வென்றதே அதிகமாக இருந்தது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்டவியா கூறுகையில்,''நமது நட்சத்திரங்கள் தங்களது திறமையை மட்டும் வெளிப்படுத்தவில்லை. தேசத்தையும் பெருமைப்படச் செய்துள்ளனர்,'' என்றார்.
அதிக பதக்கம்
அமெரிக்க பாரா நீச்சல் வீராங்கனை ஜெசிக்கா லாங் 32. ஒன்றரை வயதில் இரண்டு முழங்கால் கீழ் பகுதி பாதிக்கப்பட்டது. 2004ல் 12 வயதில் பாராலிம்பிக்கில் களமிறங்கினார். நேற்று 400 மீ., பிரீஸ்டைல் போட்டியில் அசத்திய இவர், தங்கம் வென்றார். இது பாராலிம்பிக்கில் வென்ற 30 வது பதக்கம் ஆனது. பாராலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவர் வரிசையில் 4வது இடத்தை ஜாக்கப்சனுடன் (30, சுவீடன்) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் அமெரிக்காவின் திரிஸ்சா (55) உள்ளார்.
இலக்கு தவறியது
வில்வித்தை 'ரீகர்வ்' பிரிவு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தனிநபர் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங், பூஜா ஜோடி பங்கேற்றது. அரையிறுதியில் இந்திய அணி, 2-6 என இத்தாலியிடம் தோல்வியடைந்தது. அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி இலக்கு தவற, 'ஷூட் ஆப்' முறையில் 4-5 என சுலோவேனியாவிடம் தோற்றது.
மோனா ஏமாற்றம்
துப்பாக்கிசுடுதலில் 50 மீ., ரைபிள் 3 பொசிஷன் கலப்பு அணிகளுக்கான போட்டி நேற்று நடந்தது. இந்திய சார்பில் மோனா அகர்வால், பாபு சித்தார்த் பங்கேற்றனர். இதில் சித்தார்த் 615.8 புள்ளி எடுத்து 22வது இடம் பிடித்தார். மோனா 610.5 புள்ளியுடன் 30 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருவரும் பைனல் வாய்ப்பை இழந்தனர்.
ஆண்களுக்கான பவர்லிப்டிங் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய பார்ம்ஜீத் குமார், அதிகபட்சம் 150 கிலோ மட்டும் துாக்கி, 8 வது இடம் பிடித்தார்.