தங்கம் வென்றார் அரிஹா * ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் வரலாறு
தங்கம் வென்றார் அரிஹா * ஆசிய ஜிம்னாஸ்டிக்சில் வரலாறு
ADDED : ஆக 07, 2026 11:06 PM

மணிலா: ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்சில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என அரிஹா, புதிய வரலாறு படைத்தார்.
பிலிப்பைன்சில், ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியா சார்பில் வீராங்கனை அரிஹா பங்கம்பம் 22, பங்கேற்றார். முதலில் நடந்த 'ஆர்டிஸ்ட்' (கலைத் திறன்) பிரிவில் அரிஹா, 8.650 புள்ளிகள் பெற்றார்.
அடுத்து 'எக்ஸ்கியூசன்' (செயல்முறை) பிரிவில் 7.600 புள்ளிகள் எடுத்தார். கடைசியாக நடந்த 'கடின' பிரிவில் (சவாலான அசைவுகள்) 2.850 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தமாக அரிஹா, 19.100 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆசிய ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ், சீனியர் பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.
இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பு தலைவர் சுதிர் மிட்டல் கூறுகையில்,'' இது எங்களது மிகப்பெரிய சாதனை. அரிஹா, அவரது பயிற்சியாளர் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்,'' என்றார்.
