/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்திய அணி ஏமாற்றம்: அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது
/
ஹாக்கி: இந்திய அணி ஏமாற்றம்: அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது
ஹாக்கி: இந்திய அணி ஏமாற்றம்: அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது
ஹாக்கி: இந்திய அணி ஏமாற்றம்: அரையிறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது
ADDED : டிச 07, 2025 11:12 PM

சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி அரையிறுதியில் ஏமாற்றிய இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. கோப்பை கனவு தகர்ந்த நிலையில், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் (டிச.10) இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
சென்னை, மதுரையில், ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடக்கிறது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் ஜெர்மனியின் லுாகாஸ் கோசெல் ஒரு கோல் அடித்தார். பின், 15வது நிமிடத்தில் ஜெர்மனியின் டைட்டஸ் வெக்ஸ், ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். ஜெர்மனிக்கு 30வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோசெல் மீண்டும் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 0-3 என பின்தங்கி இருந்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணிக்கு ஜோனஸ் வோன் ஜெர்சம் (40வது நிமிடம்), பென் ஹாஸ்பாக் (49வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இந்தியாவுக்கு 51வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் அன்மோல் எக்கா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஜெர்மனி அணி 10வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது.
மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என, அர்ஜென்டினாவை வீழ்த்தியது. பைனலில் (டிச. 10) ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
பெல்ஜியம் வெற்றி
சென்னையில் நடந்த 5-8வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் அணி 3-2 என பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணி 3-6 என, நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.

