ADDED : ஜன 19, 2025 11:24 PM

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ஒடிசா பெண்கள் அணி 4-1 என பெங்கால் அணியை வீழ்த்தியது.
ரூர்கேலா (ஒடிசா), ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், ஒடிசா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஒடிசா அணிக்கு மிஷேல் பில்லட் (16வது நிமிடம்), யிப்பி ஜான்சன் (18வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் பெங்கால் அணியின் உதிதா ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ஒடிசா அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய ஒடிசா அணிக்கு யிப்பி ஜான்சன் (47வது நிமிடம்), நேஹா கோயல் (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். பெங்கால் அணி வீராங்கனைகளால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஒடிசா அணி 4 போட்டியில், 2 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த மூன்று இடங்களில் சூர்மா (6 புள்ளி), பெங்கால் (4), டில்லி (3) அணிகள் உள்ளன.

