/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி
/
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி
ADDED : நவ 12, 2024 11:05 PM

ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
ஆசிய பெண்கள் ஹாக்கி அணிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 7வது சீசன் பீஹாரில் நடக்கிறது. இந்தியா, சீனா உட்பட 6 அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை வென்றது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது. போட்டியின் 3வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை சங்கீதா குமாரி, பீல்டு கோல் அடித்தார். இத்தொடரில் இவர் அடித்த 3வது கோல் இது. தீபிகா (55) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தென் கொரியா சிறப்பாக செயல்பட்டது. 34வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை, லீ யூரி கோலாக மாற்றினார். அடுத்த 4வது நிமிடம் தென் கொரியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. இதில் கேப்டன் யுன்பி சியான் கோல் அடிக்க, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது.
போட்டி முடிய 3 நிமிடம் இருந்த போது, இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதை கோலாக மாற்றினார் தீபிகா. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் சீனா, 5-0 என மலேசியாவை வீழ்த்தியது. தாய்லாந்து, ஜப்பான் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.