/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
/
ஆசிய ஹாக்கி: சாதிக்குமா இந்தியா
ADDED : ஆக 25, 2025 10:31 PM

ராஜ்கிர்: பீஹாரின் ராஜ்கிர் நகரில், ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன், ஆக. 29ல் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. பைனல், வரும் செப். 7ல் நடக்கவுள்ளது. இந்திய அணி 'ஏ' பிரிவில் சீனா (ஆக. 29), ஜப்பான் (ஆக. 31), கஜகஸ்தான் (செப். 1) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
கடைசியாக 2017ல் வங்கதேசத்தில் நடந்த தொடரில், இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது. அடுத்து 2022ல் இந்தோனேஷிய தொடரில், இந்தியா மூன்றாவது இடம் பிடித்தது. இம்முறை சொந்தமண்ணில் இந்தியா சாதிக்க காத்திருக்கிறது.
இந்திய அணி பயிற்சியாளர் கிரெக் புல்டன் கூறுகையில்,'' ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி உள்ளது. இத்தொடரில் இந்தியா கோப்பை வென்று 8 ஆண்டுகள் ஆகிவிட்டன எனத் தெரியும். இதனால் மீண்டும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இதனால் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்,'' என்றார்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,'' பீஹாரில் இதற்கு முன் நாங்கள் விளையாடியது இல்லை. முதன் முதலாக இங்கு களமிறங்க உள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தொடரில் ரசிகர்களின் ஆதரவு, அன்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'' என்றார்.