ADDED : அக் 23, 2024 10:58 PM

புதுடில்லி: ஜெர்மனிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள ஜெர்மனி ஹாக்கி அணி, இரண்டு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று, டில்லி தயான்சந்த் மைதானத்தில் நடந்தது. உலகின் 'நம்பர்-2' இடத்திலுள்ள ஜெர்மனிக்கு எதிராக, 5வதாக உள்ள இந்திய அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.
போட்டி துவங்கிய 4வது நிமிடத்தில் ஹென்ரிக் மெர்ட்ஜென்ஸ், ஜெர்மனிக்கு முதல் கோல் அடித்து கைகொடுத்தார். 22, 24 வது நிமிடங்களில் அடுத்தடுத்து கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை, இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வீணடித்தார். 29வது நிமிடம் ஜெர்மனியின் லுகாஸ் வின்பெடர் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் இந்திய அணி 0-2 என பின்தங்கியது.
இரண்டாவது பாதியில் இந்திய அணி கோல் அடிக்க அடுத்தடுத்து முயற்சி செய்தது. இருப்பினும் சரியான 'பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க முடியவில்லை. 44வது நிமிடம் சுக்ஜீத் அடித்த பந்து, துரதிருஷ்டவசமாக பக்க வலையில் சென்று விழுந்தது.
போட்டியின் கடைசி 4 நிமிடத்தில் இந்திய அணி கோல் கீப்பர் சுராஜ் கார்கேரா வெளியேறினார். இவருக்குப் பதில் கூடுதலாக ஒரு வீரர் களமிறங்கி போராடிய போதும், கடைசி வரை இந்திய அணி தரப்பில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
முடிவில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது.