'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
'ஹாட்ரிக்' வெற்றி பெறுமா இந்தியா * ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
ADDED : செப் 07, 2026 11:18 PM

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பெண்கள் பிரிவில் 10 அணிகள் மோதுகின்றன. இந்தியா, சீனா உட்பட 5 அணிகள் 'எலைட்' பிரிவில் உள்ளன. முதலில் லீக் முறையில் போட்டி நடக்கின்றன. இத்தொடரில் இரு முறை சாம்பியன் ஆன இந்திய அணி (2023, 2024) தனது முதல் போட்டியில் தென் கொரியாவை 4-1 என வென்றது.
அடுத்து மலேசியாவை 11-1 என வீழ்த்தியது. இன்று தனது மூன்றாவது போட்டியில் இந்திய அணி, ஜப்பானை சந்திக்கிறது. இந்திய அணிக்காக இதுவரை சனிகா, பூஜா சாஹூ, பூர்ணிமா தலா 3 கோல் அடித்துள்ளனர். தவிர கீதா யாதவ் (2), பினிமா (1), மாது (1) என பலரும் தங்கள் பங்கிற்கு கோல் அடித்துள்ளனர்.
இன்று மீண்டும் ஜொலிக்கும் பட்சத்தில் இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம்.
ஜப்பான் அணியை பொறுத்தவரையில் முதல் போட்டியில் தென் கொரியாவை வென்றது. அடுத்து சீனாவுடன் தோற்றது. இன்று இந்தியாவுக்கு நெருக்கடி தந்து, மீண்டு வர முயற்சிக்க காத்திருக்கிறது.
கட்டாய வெற்றி
ஆண்கள் பிரிவில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் தலா ஒரு வெற்றி, 'டிரா' செய்து, பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்று, முதலிடத்தில் உள்ள தென் கொரியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்புக்கான 'டாப்-2' இடத்தை தக்கவைக்கலாம்.
