இந்தியாவிடம் வீழ்ந்தது தென் கொரியா: ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
இந்தியாவிடம் வீழ்ந்தது தென் கொரியா: ஜூனியர் ஹாக்கியில் அபாரம்
ADDED : செப் 12, 2026 11:32 PM

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, 5-1 என தென் கொரியாவை வென்றது. இன்று பைனலில் சீனாவை எதிர்கொள்கிறது.
சீனாவில், ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் (20 வயது) நடக்கிறது. நேற்று பெண்களுக்கான அரையிறுதி போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதியில் இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது.
இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்ரியா, 17, 33, 56 வது நிமிடங்களில் அசத்தி, 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். 13வது நிமிடத்தில் மாது சிதார், 21வது நிமிடத்தில் சுக்வீர் கவுர் தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தார்.
தென் கொரிய தரப்பில் ஜியாங் (41 வது) மட்டும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
நேற்று நடந்த மற்றொரு அரையிறுதியில் சீன அணி 6-0 என்ற கணக்கில் ஜப்பானை சாய்த்தது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வென்றால் இந்தியா 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லலாம்.
அசத்துமா ஆண்கள் அணி
ஆண்களுக்கான (20 வயது) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி பைனலில் இன்று நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய ஆண்கள் அணி ஆறாவது கோப்பை கைப்பற்றலாம்.
