திவ்யான்ஷி தற்கொலை மிரட்டல்: ஆசிய விளையாட்டில் நீக்கியதால்
திவ்யான்ஷி தற்கொலை மிரட்டல்: ஆசிய விளையாட்டில் நீக்கியதால்
ADDED : செப் 12, 2026 11:31 PM

புதுடில்லி: ஆசிய விளையாட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டதால், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார் திவ்யான்ஷி.
ஜப்பானில், வரும் செப். 19ல் ஆசிய விளையாட்டு துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில், உஷு வீராங்கனை திவ்யான்ஷி 19, இடம் பெற்றிருந்தார். போட்டியில் பங்கேற்பதற்கான 'கிட்' இவருக்கு வழங்கப்பட்டது. கிளம்புவதற்கு ஒருநாள் முன்னதாக, திடீரென தொடையின் பின்புற தசைநார் கிழிசல் காரணமாக, அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவருக்குப் பதில் ஆசிய விளையாட்டில் இரு முறை பதக்கம் வென்ற நாவோரெம் ரோஷிபினா தேவி சேர்க்கப்பட்டதாக இந்திய உஷூ அமைப்பு தெரிவித்தது.
இதனால் மன உளைச்சலில் உள்ள திவ்யான்ஷி, ஒரு கட்டத்தில் மொட்டை மாடியின் உச்சிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
தகுதிப் போட்டியில் ரோஷிபினா தேவியை நான் வீழ்த்தி உள்ளேன். ஆனால் அவர் ஆசிய விளையாட்டு செல்ல விரும்பினார் என்பதால், கடந்த நான்கு மாதங்களாக எனக்கு, மனரீதியாக தொடர்ந்து தொல்லை தருகின்றனர்.
ஸ்ரீநகர் பயிற்சி முகாமில் எனது தோள்பட்டையில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தினர். இதில் இருந்து குணமடைந்து சீனா சென்று போட்டியில் பங்கேற்றேன். காயத்துடன் போட்டியில் பங்கேற்க முடியும் என டாக்டர் அனுமதி தந்தார். இதை ஏற்காமல் நீக்கி விட்டனர். இது நியாயமற்றது.
இவ்வாறு திவ்யான்ஷி கூறினார்.
