/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை * நாளை சென்னை, மதுரையில் துவக்கம்
/
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை * நாளை சென்னை, மதுரையில் துவக்கம்
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை * நாளை சென்னை, மதுரையில் துவக்கம்
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை * நாளை சென்னை, மதுரையில் துவக்கம்
ADDED : நவ 26, 2025 11:00 PM

மதுரை: ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடர் நாளை துவங்குகிறது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 14வது சீசன் நாளை சென்னை, மதுரையில் துவங்குகிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறும் 6 அணிகள், இரண்டாவது இடம் பிடிக்கும் சிறந்த 2 அணிகள் என 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பைனல், டிச. 10ல் சென்னையில் நடக்கும். இந்திய அணி, 'பி' பிரிவில் சிலி (நவ. 28), ஓமன் (நவ. 29), சுவிட்சர்லாந்து (டிச. 2) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தனது முதல் போட்டியில் நாளை, சிலியை (சென்னை) சந்திக்க உள்ளது. அடுத்து ஓமனை (நவ. 29, சென்னை), சுவிட்சர்லாந்து (டிச. 2, மதுரை) அணிகளை எதிர்த்து களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற அனுபவ கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், இந்திய அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.
இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்தியக்கு ரோகித் கேப்டனாக உள்ளார். சமீபத்திய சுல்தான் ஆப் ஜோகர் தொடரில் (21 வயது) இவர் இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்தார். இவரது தலைமையில் இந்தியா மறுபடியும் அசத்தினால், சொந்தமண்ணில் உலக சாம்பியனாக வலம் வரலாம்.
சீனா வருகை
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் முதன் முறையாக பங்கேற்க சீன அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். தவிர மலேசியா, எகிப்து, நமீபியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், சிலி அணியினர் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நான்காவது முறை
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடர் இந்தியாவில் நான்காவது முறையாக நடக்க உள்ளது. இதற்கு முன் 2013 (டில்லி), 2016 (லக்னோ), 2021ல் (புவனேஸ்வர்) இந்தியாவில் நடந்தன.
கிடைக்குமா 'மூன்று'
இந்திய அணி, ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் 2001 (ஹோபர்ட்), 2016 (லக்னோ) என இரு முறை சாம்பியன் ஆனது. இம்முறை சாதித்தால் மூன்றாவது கோப்பை வெல்லலாம்.

