ADDED : ஜன 13, 2026 11:42 PM

ராஞ்சி: இந்தியாவின் ராஞ்சியில் ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ், பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. போட்டியின் 10 வது நிமிடத்தில் பெங்கால் அணிக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதை வீணாக்காமல் எளிதான கோலாக மாற்றினார் பெங்கால் அணி கேப்டன் ஜுக்ராஜ் சிங். முதல் பாதியில் 1-0 என பெங்கால் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி துவங்கிய 3வது நிமிடத்தில், பெங்கால் வீரர் சுக்ஜீத் சிங் (38 வது) ஒரு கோல் அடித்தார். மறுபக்கம் தமிழக டிராகன்ஸ் அணிக்கு அத்ரோகித் எக்கா (35), 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடித்து உதவினார். தொடர்ந்து 42, 45வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங், அடுத்தடுத்து கோல் அடித்தார்.
பின் தமிழக டிராகன்ஸ் வீரர்கள் தாமஸ் (48), பிளேக் (50) தலா ஒரு கோல் அடித்தனர். இருப்பினும் பெங்கால் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
77 கோல்
ஹாக்கி இந்தியா லீக் தொடரில் இதுவரை 15 போட்டிகள் நடந்தன. இதில் 36 'பீல்டு', 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் 38, 3 'பெனால்டி ஸ்டிரோக்' என மொத்தம் 77 கோல் அடிக்கப்பட்டன. ஹாக்கி இந்தியா வீரர் கேன் ரசல் அதிகபட்சம் 9 கோல் அடித்துள்ளார். டாம் பூன் (5), அமன்தீப் லக்ரா (5) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

