/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி ஏலத்தில் 1000 வீரர்கள்
/
ஹாக்கி ஏலத்தில் 1000 வீரர்கள்
ADDED : அக் 10, 2024 10:58 PM

புதுடில்லி: ஹாக்கி லீக் தொடருக்கான ஏலத்தில் 1000க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. ஆறு அணிகள் மோதின. கடைசியாக 2017ல் கலிங்கா அணி சாம்பியன் ஆனது. பின் இத்தொடர் நடக்கவில்லை. தற்போது ஏழு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் நடக்கவுள்ளது.
ஆண்கள் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. தவிர, முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் அக். 13-14ல் டில்லியில் நடக்க உள்ளது. அடுத்து வீராங்கனைகளுக்கான ஏலம் அக். 15ல் நடக்கும்.
வீரர்களுக்கான ஏலத்தில் இந்திய உள்ளூர் நட்சத்திரங்கள் 400 பேர் பதிவு செய்துள்ளனர். இத்துடன் 150க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் 250 உள்ளூர், 70க்கும் மேற்பட்ட அன்னிய வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எத்தனை பேர்
ஒவ்வொரு அணியில் 24 பேர் (16 இந்திய வீரர்-8 வெளிநாட்டு வீரர்) இடம் பெறுவர். ரூ. 2 லட்சம், ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என மூன்று பிரிவுகளில் ஹாக்கி நட்சத்திரங்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், துணைக் கேப்டன் ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், மன்தீப் சிங்குடன், முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் ருபிந்தர் பால் சிங், பிரேந்திர லக்ரா, தரம்விர் சிங் ஏலத்தில் இடம் பெற்றனர்.
பெண்களுக்கான பிரிவில் சவிதா, சலிமா, இளம் வீராங்கனை தீபிகா, வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, முன்னாள் நட்சத்திரங்கள் லிலிமா, யோகிதா, நமிதா உள்ளிட்டோர் ஏலத்தில் இடம் பிடித்துள்ளனர்.
தொடர் எப்போது
ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஆறாவது சீசன், வரும் டிச. 28- 2025, பிப் 1 வரை, ராஞ்சி, ரூர்கேலாவில் நடக்கும். பெண்களுக்கான பைனல், ஜன. 26ல் ராஞ்சி, ஆண்களுக்கான பைனல் பிப். 1ல் ரூர்கேலாவில் நடக்க உள்ளன.