ADDED : ஆக 21, 2026 11:25 PM

ஆம்ஸ்டல்வீன்: அரையிறுதிக்கான இரண்டாவது சுற்று, முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-2 என தோல்வியடைந்தது.
பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, லீக் சுற்றில் 5 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. அரையிறுதிக்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதில் 'இ' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி முதல் போட்டியில் நேற்று நெதர்லாந்தை எதிர் கொண்டது. 2, 38 வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளை, நெதர்லாந்தின் இப்பி, மாட்லா கோலாக மாற்றினர்.
58 வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்னீத் கவுர் அடித்த பந்து, நெதர்லாந்து கோல் கீப்பர் 'ஹெல்மெட்டில்' பட்டு திரும்பியது. இந்திய வீராங்கனைகள் கடைசி வரை போராடிய போதும், ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் இந்தியா 0-2 என தோற்றது.
வாய்ப்பு எப்படி
'இ' பிரிவில் நெதர்லாந்து அணி (6 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. அடுத்த இடங்களில் சீனா (2), இந்தியா (1), ஆஸ்திரேலியா (1) உள்ளன. இந்திய அணி நாளை, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதில் வென்றால், சீனா-நெதர்லாந்து போட்டியின் முடிவுக்கு ஏற்ப, இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு தெரியவரும்.
* நேற்று 'இ' பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் சீனா, ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
* 9-16 வது இடத்துக்காக தென் ஆப்ரிக்கா, ஜப்பான் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 4-1 என சிலியை வென்றது.
