இந்தியாவின் 51 ஆண்டு ஏக்கம் தீருமா... * உலக கோப்பை ஹாக்கியில் எதிர்பார்ப்பு
இந்தியாவின் 51 ஆண்டு ஏக்கம் தீருமா... * உலக கோப்பை ஹாக்கியில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2026 11:16 PM

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கியில் சாதிக்கும் இலக்குடன் இந்திய அணி உள்ளது. 51 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வெல்ல காத்திருக்கிறது.
பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி திருவிழா (ஆக. 14-30, ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்க உள்ளது. ஆண்கள் பிரிவில் 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, சுதந்திர தினத்தில் ஆம்ஸ்டல்வீன், வாகனர் அரங்கில் தனது முதல் சவாலில் வேல்ஸ் அணியை (ஆக.15) எதிர்கொள்கிறது. அடுத்து, இங்கிலாந்து (ஆக. 17), பாகிஸ்தான் (ஆக. 19) அணிகளுடன் மோத உள்ளது.
ராசியில்லாத 'உலகம்'
ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய அணி, உலக கோப்பையில் பெரிதாக சாதிக்கவில்லை. 1971ல் மூன்றாவது, 1973ல் இரண்டாவது இடம் பெற்றது. 1975ல் உலக கோப்பை வென்றது. இதற்கு பின் சோபிக்க முடியவில்லை. சொந்த மண்ணில், 2018ல் 6வது இடம், 2023ல் 9வது இடம் பிடித்தது. 51 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோப்பை கைப்பற்றும் உறுதியுடன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி உள்ளது. டோக்கியோ (2021), பாரிஸ் (2024) என தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது நமது அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. 2025ல் ஆசிய கோப்பையும் கைப்பற்றினர். சமீபத்திய புரோ லீக் தொடரில் ஜெர்மனி, நெதர்லாந்தை வென்றது. இதே போன்ற சிறப்பான 'பார்ம்' தொடர்ந்தால், உலக கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். 'டிராக்-பிளிக் ஸ்பெஷலிஸ்ட்' கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், அனுபவ மந்தீப் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சுக்ஜீத் சிங், அபிஷேக் உள்ளனர். இளம் வீரர்களான ரஜிந்திர் சிங், ஷிலானந்த் லக்ரா நம்பிக்கை தருகின்றனர்.
சிறப்பு பயிற்சி
உலக கோப்பை போட்டிக்காக நெதர்லாந்து செல்வதற்கு முன் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை பகுதியில் 3 நாள் பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இங்கு உடல், மனதளவில் தயாராக உள்ளனர். பிரபல மனநல பயிற்சி நிபுணர் பேடி அப்டன் சிறப்பு ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்திய பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் கூறுகையில்,''இந்திய அணி உலக கோப்பை வென்று 51 ஆண்டுகளாகிறது. இந்த முறை சாதிக்க தயாராக உள்ளோம். வீரர்கள் பதட்டமான கட்டத்தில் 'கூலாக' செயல்பட்டால், வெற்றியை வசப்படுத்தலாம்,''என்றார்.
பெண்கள் பெருமை
இந்திய பெண்கள் அணி இம்முறை சலிமா டேடெ தலைமையில் களமிறங்குகிறது. முதல் முறையாக உலக கோப்பை வெல்லும் ஆசையில் உள்ளது. 1974ல் 4வது இடம் பெற்றதே நமது பெண்கள் அணியின் சிறந்த செயல்பாடு. கேப்டன் சலிமா கூறுகையில்,''உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்,''என்றார்.
தடுமாற்றம் ஏன்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜூட் பெலிக்ஸ் கூறுகையில்,''உலக கோப்பையில் இந்திய அணி சோபிக்க முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. இயற்கையான புல் களத்தில் இருந்து திடீரென செயற்கை இழையிலான களத்திற்கு மாற்றினர். இது நமது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. 'ஹாக்கி ஸ்டிக்' மூலம் சாகசம் நிகழ்த்தி, ஆக்ரோஷமாக ஆடிய இந்திய வீரர்கள் செயற்கை களத்தில் தடுமாறினர். அதே நேரத்தில் ஐரோப்பா அணியினர் விரைவாக பக்குவப்படுத்திக் கொண்டனர்.
இந்திய அணியின் தற்காப்பு பகுதியும் பல போட்டிகளில் பலவீனமாக இருந்தது. இதனால், கடைசி தருணங்களில் எதிரணிகள் எளிதாக கோல் அடித்தன. 'பெனால்டி கார்னர்' மூலம் கோல் அடிப்பதையே அதிகம் சார்ந்திருக்கிறோம். மற்ற அணிகள் 'பீல்டு' கோல் அடித்து அசத்துகின்றன. மத்திய கள வீரர்கள் சாமர்த்தியமாக பந்தை பெற்று, முன் கள வீரர்கள் கோல் அடிக்க உதவ வேண்டும். தற்காப்பு பகுதியும் பலமாக இருந்தால், உலக கோப்பை தொடரில் சாதிக்கலாம்,''என்றார்.
