ADDED : ஆக 04, 2026 11:14 PM

செயின்ட் லுாயிஸ்: செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் பிரக்ஞானந்தா.
அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் செஸ் கிளப் சார்பில் சர்வதேச 'ரேபிட் அண்டு பிளிட்ஸ்' தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கின்றன. நேற்று மூன்று சுற்று போட்டி நடந்தன.
நான்காவது சுற்றில் பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் தொடரின் சாம்பியன், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் மோதினர். இப்போட்டி 27 நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஐந்தாவது சுற்றில் பிரக்ஞானந்தா-அவாண்டர் லியாங் (அமெரிக்கா) மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, துவக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றார். முடிவில் 32 நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த அமெரிக்காவின் சோ வெஸ்லேவுக்கு எதிரான ஆறாவது சுற்று போட்டியை, பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார். இதுவரை முடிந்த ஆறு 3 சுற்று முடிவில், 3 வெற்றி, 3 'டிரா' செய்த பிரக்ஞானந்தா, 9 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தாரோவ் (7), அமெரிக்காவின் பெரஸ் (6) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.
'டாப்-10' பட்டியலில்...
நடப்பு தொடரில் இதுவரை 3 வெற்றி பெற்றதை அடுத்து, சர்வதேச 'ரேபிட்' தரவரிசையில், 13.5 புள்ளிகள் கூடுதலாக பெற்று, 3 இடம் முன்னேறிய இந்தியாவின் பிரக்ஞானந்தா (2714.5), 'டாப்-10' பட்டியலில் நுழைந்தார். தற்போது 10 வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி (2745) 3, ஆனந்த் (2721) 9வது இடத்தில் உள்ளனர்.
முதல் இரு இடத்தில் நார்வேயின் கார்ல்சன் (2803), பிரான்சின் அலிரேசா (2749) உள்ளனர்.
