ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா * ஜப்பானை வீழ்த்தி அபாரம்
ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா * ஜப்பானை வீழ்த்தி அபாரம்
ADDED : ஜூன் 16, 2026 11:37 PM

ஆக்லாந்து: நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. நேற்று 2-1 என ஜப்பான் அணியை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நியூசிலாந்தில் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி 4வது சீசன் நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் ஆக்லாந்தில் நடக்கின்றன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்லும் அணி, 2026-27 புரோ லீக் தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம்.
இந்திய அணி 'ஏ' பிரிவில் அமெரிக்கா, உருகுவே, ஜப்பான் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவை சாய்த்த இந்தியா, நேற்று தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி துவங்கியதும் (33 நிமிடம்) இந்தியாவில் சலிமா, ஒரு கோல் அடித்தார். அடுத்த இரண்டாவது நிமிடம் ஹிராமிட்சு (ஜப்பான்) ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என ஆனது.
49 வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி கோல் அடிக்க, இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பங்கேற்ற 2 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளியுடன் 'டாப்-2' இடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது. நாளை தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, உருகுவேயை சந்திக்கிறது.
