மன்பிரீத் சிங் புதிய சாதனை: 413 சர்வதேச போட்டியில் பங்கேற்று
மன்பிரீத் சிங் புதிய சாதனை: 413 சர்வதேச போட்டியில் பங்கேற்று
ADDED : ஜூன் 18, 2026 11:11 PM

ரோட்டர்டாம்: இந்தியாவின் மன்பிரீத் சிங், 413 சர்வதேச போட்டியில் பங்கேற்று புதிய சாதனை படைத்தார்.
நெதர்லாந்து சென்றுள்ள இந்திய ஹாக்கி அணி, ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான புரோ லீக் தொடரில் பங்கேற்கிறது. ரோட்டர்டாமில் நடந்த போட்டியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு மன்தீப் சிங் (7வது நிமிடம்), ஷிலானந்த் லக்ரா (13வது), நிலகண்ட சர்மா (35வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
இப்போட்டி, இந்தியாவின் மன்பிரீத் சிங் பங்கேற்ற 413வது சர்வதேச போட்டி. இதன்மூலம் இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் திலிப் டிர்கேவை (412 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார் மன்பிரீத். இவருக்கு, ஹாக்கி இந்தியா சார்பில் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடந்த 2011ல், தனது 19வது வயதில் அறிமுகமான மன்பிரீத், இதுவரை 413 போட்டியில், 23 கோல் அடித்துள்ளார்.
5வது வீரர்
அதிக போட்டிகளில் பங்கேற்ற சர்வதேச வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தை கைப்பற்றினார் மன்பிரீத். ஏற்கனவே பெல்ஜியத்தின் ஜான்-ஜான் டோமென் (481 போட்டி), நெதர்லாந்தின் டி நுாயர் (453), ஆஸ்திரேலியாவின் எடி ஆக்கென்டன் (451), பிரிட்டனின் பாரி மிடில்டன் (432) இம்மைல்கல்லை எட்டினர்.
