ADDED : நவ 25, 2025 11:20 PM

இபோ: அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியடைந்தது.
மலேசியாவின் இபோ நகரில், சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரின் 31வது சீசன் நடக்கிறது. இந்தியா, பெல்ஜியம், நியூசிலாந்து, மலேசியா, தென் கொரியா, கனடா என 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலுக்கு (நவ. 30) தகுதி பெறும்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் கொரியாவை (1-0) வென்றது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வலிமையான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. 17 வது நிமிடம் பெல்ஜியத்தில் ரோமன் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0-1 என பின்தங்கியது.
இந்தியாவின் அபிஷேக் (33 வது) ஒரு கோல் அடிக்க ஸ்கோர் சமன் (1-1) ஆனது. இதன் தென் கொரியாவின் நிகோலஸ் (45), ரோமன் (45) தலா ஒரு கோல் அடித்தனர். போட்டி முடிவதற்கு 3 நிமிடத்துக்கு முன், இந்தியாவின் ஷிலானந்த் லக்ரா (57) ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதுவரை 2 போட்டியில் 3 புள்ளியுடன் இந்தியா, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடத்தில் நியூசிலாந்து (4), மலேசியா (4), பெல்ஜியம் (4) உள்ளன.
இன்று தனது 3வது போட்டியில் இந்திய அணி, மலேசியாவை சந்திக்கிறது.

