UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 10:04 PM

புதுடில்லி: ‘‘பாரா ஆசிய விளையாட்டில் 114 பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரங்கள், புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர்,’’ என, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடந்தது. இந்தியா சார்பில் 167 பேர் (111 வீரர்கள், 56 வீராங்கனைகள்) பங்கேற்றனர். இதில் 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என 114 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் 4வது இடம் பிடித்தது.
பாரா ஆசிய விளையாட்டு வரலாற்றில், ஒரு சீசனில் அதிக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது இந்தியா. இதற்கு முன், 2023ல் சீனாவில் நடந்த போட்டியில் 27 தங்கம், 32 வெள்ளி, 49 வெண்கலம் என, 108 பதக்கம் வென்றிருந்தது. இம்முறை தடகளத்தில் அதிகபட்சமாக 65 (22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலம்), பாட்மின்டனில் 16 பதக்கம் (3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம்) கிடைத்தன.
இதுகுறித்து பிரதமர் மோடி, சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘சமீபத்தில் முடிந்த பாரா ஆசிய விளையாட்டில், நமது இந்திய நட்சத்திரங்களின் செயல்பாடு மகத்தானது. மொத்தம் 114 பதக்கம் வென்றது, இந்திய பாரா விளையாட்டு நட்சத்திரங்களின் மிகச் சிறந்த செயல்பாடு. இது, ஒட்டுமொத்த தேசத்திற்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கும் தருணமாகும்.
இப்போட்டியில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்களை, அவர்களின் அசாதாரணமான மன உறுதிக்காக பாராட்டுகிறேன். இவர்கள் அனைவரும் இந்த வரலாற்று சாதனையில் பங்களித்துள்ளனர். இதன்மூலம் ஒட்மொத்த இந்தியர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளனர்,’ என, தெரிவித்திருந்தார்.
