/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அபாரம்
/
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அபாரம்
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அபாரம்
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா: ஒலிம்பிக் ஹாக்கியில் அபாரம்
UPDATED : ஆக 03, 2024 12:04 AM
ADDED : ஆக 03, 2024 12:01 AM

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 3-2 என ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் மொத்தம் 12 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நியூசிலாந்து, அயர்லாந்தை வென்ற இந்தியா, அர்ஜென்டினாவுடன் 'டிரா' செய்தது. பெல்ஜியத்திடம் மட்டும் தோல்வியடைந்தது.
ஏற்கனவே காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்த இந்தியா, நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு 12வது நிமிடத்தில் அபிஷேக் ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். பின், 13வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். 25வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் தாமஸ் கிரேக் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.
52 ஆண்டுகளுக்கு பின்: இரண்டாவது பாதியின் 32வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய ஆஸ்திரேலியாவுக்கு 55வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் பிளேக் கோவர்ஸ் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கடைசியாக 1972ல் ஜெர்மனியில் நடந்த முனிக் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றிருந்தது.
லீக் சுற்றில் விளையாடிய 5 போட்டியில், 3 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடம் பிடித்தது. நாளை நடக்கும் காலிறுதியில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் 3வது இடம் பிடிக்கும் (ஜெர்மனி/பிரிட்டன்/நெதர்லாந்து) அணியை எதிர்கொள்ளும்.