/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கஜகஸ்தானை வென்றது இந்தியா: ஆசிய கூடைப்பந்தில் அசத்தல்
/
கஜகஸ்தானை வென்றது இந்தியா: ஆசிய கூடைப்பந்தில் அசத்தல்
கஜகஸ்தானை வென்றது இந்தியா: ஆசிய கூடைப்பந்தில் அசத்தல்
கஜகஸ்தானை வென்றது இந்தியா: ஆசிய கூடைப்பந்தில் அசத்தல்
ADDED : நவ 25, 2024 10:58 PM

சென்னை: ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்றில் இந்திய அணி, கஜகஸ்தானை வீழ்த்தியது.
சவுதி அரேபியாவில், அடுத்த ஆண்டு (ஆக. 5-17) ஆசிய கோப்பை கூடைப்பந்து 31வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்கு தகுதி பெறும்.
'இ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, முதல் மூன்று போட்டியில் கஜகஸ்தான், ஈரான், கத்தார் அணிகளிடம் தோல்வியடைந்தது. சென்னையில் நடந்த 4வது போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 88-69 (9-18, 28-15, 26-18, 25-18) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தவிர 27 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய அணி, கஜகஸ்தானை வீழ்த்தியது.
இந்திய அணிக்கு பிரனவ் பிரின்ஸ் (17 புள்ளி), கன்வர் சாந்து (17), அமிஜோத் சிங் (15) கைகொடுத்தனர். கஜகஸ்தான் அணிக்கு விளாடிமிர் இவானோவ் (17 புள்ளி) ஆறுதல் தந்தார்.
நான்கு போட்டியில், ஒரு வெற்றி, 3 தோல்வி என 5 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. அடுத்து இந்திய அணி, ஈரான் (2025, பிப். 21), கத்தார் (2025, பிப். 24) அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் வெற்றி கண்டால், 'டாப்-2' இடத்தை உறுதி செய்து பிரதான சுற்றில் பங்கேற்கலாம்.