முன்னேற்ற பாதையில் இந்தியா: ஆசிய விளையாட்டு செயல்பாடு எப்படி
முன்னேற்ற பாதையில் இந்தியா: ஆசிய விளையாட்டு செயல்பாடு எப்படி
UPDATED : அக் 04, 2026 11:13 PM
ADDED : அக் 04, 2026 11:07 PM

நகோயா: ஆசிய விளையாட்டில் இந்தியா நான்காவது இடம் பிடித்தது. துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பாட்மின்டனில் சோபிக்க தவறியதால், பதக்க எண்ணிக்கை குறைந்தது.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடந்தது. இதில் 169 தங்கம் உட்பட 341 பதக்கம் கைப்பற்றிய சீனா, தொடர்ந்து 12வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை தட்டிச் சென்றது. போட்டியை நடத்திய ஜப்பானுக்கு (83 தங்கம் உட்பட 269 பதக்கம்) 2வது இடம் கிடைத்தது.
வில்வித்தையில் முன்னேற்றம்: இம்முறை வில்வித்தையில் இந்திய நட்சத்திரங்கள் முன்னேற்றம் கண்டனர். வலிமையான தென் கொரிய நட்சத்திரங்களை சமாளித்த இந்திய வீரர், வீராங்கனைகள் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 9 பதக்கம் கைப்பற்றினர். இதில் கும்கும், சிகிதா, சாஹில் சவுத்ரி தலா 2 தங்கம் கைப்பற்றினர்.
துப்பாக்கி சுடுதலில் கலக்கிய நீரூ தண்டா, ஆசிய விளையாட்டு 'டிராப்' தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார். தடகளத்தில் அசத்திய தமிழகத்தின் வித்யா, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கங்களை தட்டிச் சென்றார். கோல்ப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பிரனவி உர்ஸ், முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
தற்காப்பு கலை, சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் கிடைத்தது. பெண்கள் ஹாக்கியில் 44 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது.
பதக்கம் குறைவு: இம்முறை 21 தங்கம் உட்பட 85 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இது, கடந்த முறையை ஒப்பிடுகையில் 21 பதக்கம் குறைவு. சீனாவின் ஹாங்சு நகரில் 2023ல் நடந்த போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என, 106 பதக்கங்களை இந்தியா பெற்றது.
இம்முறை இந்தியாவுக்கு 'டாப்-5' வரிசையில் இடம் கிடைப்பது சந்தேகமாக இருந்தது. கடைசி 2 நாளில், 11 தங்கம் கைப்பற்றியதால் மீண்டும் 4வது இடத்தை உறுதி செய்தது. இதற்கு தடகளம், துப்பாக்கி சுடுதலில் பதக்க எண்ணிக்கை குறைந்ததே காரணம். கடந்த முறை (2023) துப்பாக்கி சுடுதலில் 22, தடகளத்தில் 29 பதக்கம் கிடைத்திருந்தது. ஆனால் இம்முறை துப்பாக்கி சுடுதலில் 15, தடகளத்தில் 24 பதக்கம் மட்டுமே கிடைத்தது.
துப்பாக்கி சுடுதலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனு பாகர், ஒரு பதக்கம் கூட பெறவில்லை. இதேபோல டென்னிசில் 40 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. டேபிள் டென்னிஸ், பளுதுாக்குதல், பாட்மின்டனில் தலா ஒரு பதக்கம் மட்டும் கிடைத்தது.
முன்னணி தடகள நட்சத்திரங்களான ஜோதி யார்ஜி (100 மீ., தடை தாண்டும் ஓட்டம்), அவினாஷ் (3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்'), பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள்ஜம்ப்') காயத்தால் போட்டியில் இருந்து விலகியது பின்னடைவாக அமைந்தது.தவிர இம்முறை வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு விளையாட்டு கிராமம் அமைக்கப்படாதது பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல போக்குவரத்து வசதியும் போதுமானதாக இல்லை. நீண்ட நேரம் பயணிக்க வேண்டியிருந்ததால், போட்டிக்கு தயாராவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
ஒலிம்பிக் இலக்கு: வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. ஆசிய விளையாட்டில் கிடைத்த அனுபவம் இந்திய நட்சத்திரங்களுக்கு கைகொடுத்தால் ஒலிம்பிக்கிலும் பதக்க மழை பொழியலாம்.
