இந்தியாவுக்கு முதல் பதக்கம்: காமன்வெல்த் குத்துச்சண்டையில் உறுதியானது
இந்தியாவுக்கு முதல் பதக்கம்: காமன்வெல்த் குத்துச்சண்டையில் உறுதியானது
ADDED : ஜூலை 23, 2026 09:57 PM

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியானது. குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா, நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நேற்று துவங்கியது. இதில் 74 நாடுகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 123 பேர் (75 வீரர்கள், 48 வீராங்கனைகள்) களமிறங்குகின்றனர்.
பதக்கம் உறுதி: குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 14 பேர் (7 வீரர்கள், 7 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். இதில் 8 பேருக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 75 கிலோ பிரிவில், இந்தியாவின் லவ்லினா உட்பட 5 பேர் மட்டும் இடம் பெற்றுள்ளனர். இதனால் முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்ட லவ்லினா, நேரடியாக அரையிறுதியில் களமிறங்க உள்ளார். இதன்மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா.
பெண்களுக்கான மற்ற எடை பிரிவு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்ட இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா (57 கிலோ), பிரியா (60), பிரீத்தி (54) ஆகியோர் காலிறுதியில் வெற்றி பெறும் பட்சத்தில் பதக்கத்தை உறுதி செய்யலாம். பெண்களுக்கான 51 கிலோ பிரிவு தகுதி போட்டியில் நிகாத் ஜரீன், மீனாட்சி ஹூடாவை வீழ்த்திய சாக் ஷி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 11 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலம் என, 44 பதக்கம் கிடைத்துள்ளது. கடந்த 2022ல் பர்மிங்காமில் நடந்த போட்டியில் இந்திய குத்துச்சண்டை நட்சத்திரங்கள் 8 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் கைப்பற்றினர்.
அருண் குமார் விலகல்
காமன்வெல்த் விளையாட்டுக்கு இந்திய ஜூடோ வீரர் அருண் குமார் 21, தேர்வு செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் ('நாடா') நடத்திய சோதனையில் இவர், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து தற்காலிக தடை விதிக்கப்பட்டதால், காமன்வெல்த் விளையாட்டில் இருந்து அருண் குமார் விலகினார்.
* தகுதிச்சுற்றின் போது ஊக்கமருந்து தடுப்பு விதிகள் பலமுறை மீறப்பட்டதால், பளுதுாக்குதல் போட்டிக்கான இந்திய நட்சத்திரங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 11 ஆக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதுகு பகுதி காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் தில்பாக் சிங் விலகினார்.
