/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஸ்ரீஜேஷ் 'ஜெர்சி' ஓய்வு * இந்திய ஹாக்கி அறிவிப்பு
/
ஸ்ரீஜேஷ் 'ஜெர்சி' ஓய்வு * இந்திய ஹாக்கி அறிவிப்பு
ADDED : ஆக 14, 2024 10:28 PM

புதுடில்லி: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அணிந்த 'ஜெர்சி' எண் 16க்கு ஓய்வு தர இந்திய ஹாக்கி முடிவு செய்துள்ளது.
இந்திய அணி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் 36. டோக்கியோ, பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி வெண்கலம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். 18 ஆண்டு ஹாக்கி வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற இவர், அடுத்து ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட காத்திருக்கிறார்.
இவருக்கான பாராட்டு விழா டில்லியில் நடந்தது. ஹாக்கி இந்தியா (எச்.ஐ.,) நிர்வாகிகள், சக வீரர்கள் பங்கேற்றனர். எச்.ஐ., பொதுச்செயலர் போலா நாத் சிங் கூறுகையில்,'' சீனியர் அணியில் ஸ்ரீஜேஷ் அணிந்த ஜெர்சி எண் 16க்கு ஓய்வு கொடுத்துள்ளோம். அதேநேரம் ஜூனியர் அணிக்கு இது பொருந்தாது. தற்போது ஜூனியர் அணிக்கு ஸ்ரீஜேஷ், பயிற்சி தர உள்ளார். இவர் மற்றொரு ஸ்ரீஜேஷை கொண்டு வருவார். அந்த வீரர் 16ம் எண் கொண்ட ஜெர்சி அணிவார்,'' என்றார்.
ஸ்ரீஜெஷ் பெருமிதம்
ஸ்ரீஜேஷ் கூறுகையில்,'' எனது 18 ஆண்டு பயணம் என்பது மிக நீண்டது. இதில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். ஆனால், அது தான் என்னை சிறந்த மனிதனாக மாற்றியது. சர்வதேச அரங்கில் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து விளையாடினேன். இந்திய அணி எனது இரண்டாவது குடும்பம். சக வீரர்களுடன் இனிமேல் விளையாட முடியாதது வருத்தம்,'' என்றார்.
இந்திய ஹாக்கி 'கடவுள்'
எச்.ஐ., தலைவர் திலிப் டிர்கே கூறுகையில்,''கடந்த 18 ஆண்டில் இந்திய ஹாக்கிக்கு ஸ்ரீஜேஷ் கொடுத்த பங்களிப்பை பாராட்டுகிறோம். மற்றபடி அவருக்கு நாம் விடை கொடுக்கவில்லை. இவரை, நவீன இந்திய ஹாக்கியின் கடவுள் என அழைக்கலாம்,'' என்றார்.

