UPDATED : அக் 06, 2026 04:36 AM
ADDED : அக் 05, 2026 09:54 PM
பூஜா சிங், 19, (உயரம் தாண்டுதல்)
பதக்கம்: வெண்கலம்
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சிங். இவரது தந்தை ஹன்ஸ்ராஜ், கட்டுமான தொழிலாளி. நிதி நெருக்கடி காரணமாக, கிராமத்து வயல் வெளிகளில் மூங்கில் கம்பு, உமி மூட்டைகளை பயன்படுத்தி பயிற்சி மேற்கொண்டார். கடந்த முறை ஆசிய விளையாட்டில் (2023) 6வது இடம் பிடித்த இவர், ஆசிய சாம்பியன்ஷிப் (2025) போட்டியில் தங்கம் வென்றார். ஜப்பானில் அசத்திய இவர், 24 ஆண்டுகளுக்கு பின் ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையானார்.
ரோஷிபினா தேவி, 25, (உஷு)
பதக்கம்: வெள்ளி
மணிப்பூரை சேர்ந்த ரோஷிபினா தேவி, விவசாயியின் மகள். தற்காப்பு கலை திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட ரோஷிபினா, தனது 9வது வயதில் உஷு பயிற்சியை துவக்கினார். ஆரம்பகட்ட பயிற்சி, பயணச் செலவிற்காக இவரது தந்தை டாமு சிங், தனது நிலத்தை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வறுமையை கடந்து சாதித்த இவர், தனது அசாத்திய திறமையால் ஆசிய விளையாட்டு உஷு போட்டியில் ‘ஹாட்ரிக்’ பதக்கம் வென்ற முதல் இந்தியரானார். ஏற்கனவே 2018ல் வெண்கலம், 2023ல் வெள்ளி வென்றிருந்தார்.
சிகிதா, 21, (வில்வித்தை)
பதக்கம்: 2 தங்கம்
தெலுங்கானாவை சேர்ந்த சிகிதா, சிறு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பயிற்சி மேற்கொள்வதற்கும், வில்வித்தை உபகரணங்கள் வாங்குவதற்கும் போதிய பணமின்றி தவித்த இவருக்கு, தந்தை ஸ்ரீனிவாஸ் ராவ், தனது விவசாய நிலத்தை அடமானம் வைத்ததுடன், நெல் அறுவடை இயந்திரத்தை விற்று, கடனும் வாங்கி கொடுத்தார். தந்தையின் ஆதரவால் வில்வித்தையில் ஜொலித்த இவர், ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது மட்டுமின்றி, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் (2028) தகுதி பெற்றார்.
பிரின்ஸ் நோபிள், 30, (பாய்மரப்படகு)
பதக்கம்: ஒரு வெள்ளி
கேரளாவின் கொச்சியில் பிறந்தவர் பிரின்ஸ் நோபிள். இவரது தந்தை மீனவர். தனது 13வது வயதில் படகு ஓட்டக் கற்றுக்கொண்ட நோபிளுக்கு, 2018ல் அதிர்ச்சி காத்திருந்தது. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இவரது தந்தை மரணமடைந்தார். இதனையடுத்து தனது தந்தையின் நினைவாக பாய்மரப்படகு போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார். தாயார் கொடுத்த ஊக்கத்தால் ஆசிய விளையாட்டில் தனது உறவினர் மானு பிரான்சிசுடன் இணைந்து பதக்கம் வென்று சாதித்தார். இப்பதக்கத்தை தந்தைக்கு அர்ப்பணித்தார் நோபிள்.
ஆன்சி, 25, (நீளம் தாண்டுதல்)
பதக்கம்: ஒரு வெள்ளி
கேரளம் மாநிலம் திருச்சூரில் உள்ள சிறிய மீன்பிடி கிராமமான நாட்டிகாவை சேர்ந்தவர் ஆன்சி. இவரது தந்தை சோஜன், ஆட்டோ ரிக் ஷா டிரைவர் என்பதால் குடும்பத்தில் நிதிச் சவால்கள் இருந்தன. இருப்பினும் மனம் தளராமல் தந்தையின் ஆதரவுடன் தன்னை மேம்படுத்திக் கொண்ட ஆன்சி, ஆசிய விளையாட்டில் தொடர்ந்து 2வது முறையாக வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
