UPDATED : அக் 06, 2026 04:36 AM
ADDED : அக் 05, 2026 09:54 PM
வித்யா, 29, (தடகளம்)
பதக்கம்: 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்
தமிழகத்தின் கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை மீனாட்சிபுரம், மாரியம்மன் கோவில் அருகே வசிக்கிறார் வித்யா. இவரது தந்தை ராம்ராஜ். ஈரோடு அரசு விடுதியில் சேர்ந்து, பயிற்சியில் ஈடுபட்டார். துவக்கத்தில் ஹாக்கி விளையாடிய வித்யா, பின் தடகளத்துக்கு மாறினார்.
'டிரக்' டிரைவராக இருந்த இவரது தந்தை, இரவில் பிஸ்கட், டீ மட்டும் அருந்தி, பணத்தை சேமித்து, மகளுக்கு 'ஷூ' வாங்கிக் கொடுத்தார்.
ஆசிய விளையாட்டு, 400 மீ., தடை ஓட்டத்தில் பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்து அசத்தினார் வித்யா. தவிர, 400 மீ., தடை ஓட்டத்தை 55 வினாடிக்குள் ஓடிய முதல் இந்தியர் ஆனார் வித்யா (54.75 வினாடி).
திக் ஷா, 25, (கோல்ப்)***
பதக்கம்: வெள்ளி
ஹரியானாவை சேர்ந்தவர் திக் ஷா தாகர். பிறக்கும் போது காது கேளாதவர் (செவித்திறன் இல்லாதவர்). 6 வயதில் சிறப்பு கருவி அணிந்தார். தனது 7 வயதில், காது கேளாத சகோதரர் யோகேஷுடன் இணைந்து கோல்ப் விளையாடினார். தந்தை நரிந்தர், ராணுவத்தில் கர்னலாக இருந்தார். கோல்ப் போட்டிகளில் பங்கேற்ற இவர், மகளுக்கு பயிற்சி தந்தார்.
காது கேளாதோருக்கான 'டெப்லிம்பிக்கில்' 2 தங்கம், 1 வெள்ளி வென்றார். ஒலிம்பிக், 'டெப்லிம்பிக்' என இரண்டிலும் பங்கேற்ற உலகின் முதல் நட்சத்திரம் என சாதனை படைத்துள்ளார். இம்முறை அணிகளுக்கான பிரிவில் வெள்ளி வென்றார்.
மீராபாய் சானு, 32, (பளுதுாக்குதல்)
பதக்கம்: வெள்ளி
மணிப்பூரின் பின்தங்கிய குடும்பத்தில் கடைக்குட்டியாக (6வது) பிறந்தவர் மீராபாய் சானு. இந்திய பளுதுாக்குதல் வீராங்கனை குஞ்சராணி தேவியால் ஈர்க்கப்பட்ட இவர், துவக்கத்தில் விறகுகளை சுமந்து, தனது உடலை வலிமையாக்கினார். பயிற்சிக்காக, அடிக்கடி மணல் லாரியில் பயணித்து, இம்பால் சென்றார். ஒலிம்பிக், காமன்வெல்த்தை தொடர்ந்து ஆசிய விளையாட்டிலும் அசத்திய மீராபாய், மூன்று முக்கிய போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தினார்.
கும்கும், 17, (வில்வித்தை)
பதக்கம்: 2 தங்கம், 1 வெள்ளி
மகாராஷ்டிராவின் அம்ராவதியை சேர்ந்தவர் கும்கும். சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். தாயின் விருப்பத்திற்கு ஏற்ப வில்வித்தையில் களமிறங்கினார். மகளின் பயிற்சிக்காக, இனிப்பு பண்டங்களுக்கான 'பேக்கேஜிங்' பொருள் தயாரித்து விற்பனை செய்து வரும் கும்கும் தந்தை, தனது பல ஆண்டுகால சேமிப்பில் இருந்து, வில் வாங்கித் தந்தார்.
முதன் முதலாக ஆசிய விளையாட்டில் களமிறங்கினார். 'ரிகர்வ்' பிரிவில் தனிநபர், பெண்கள் அணிகள் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். தவிர கலப்பு இரட்டையரிலும் வெள்ளி வசப்படுத்தி, ஒலிம்பிக் போட்டிக்கும் (2028, லாஸ் ஏஞ்சல்ஸ்) தகுதி பெற்றார்.
அமன் ஷெராவத், 23, (மல்யுத்தம்)
பதக்கம்: தங்கம்
ஹரியானாவின் பிரோஹரை சேர்ந்தவர் அமன் ஷெராவத். சிறு வயதில் சகதி மண்ணில் மல்யுத்தம் பழகினார். சுஷில் குமார் (2012) ஒலிம்பிக் பதக்கம் வென்றதை பார்த்து ஈர்க்கப்பட்டு, அவர் பயிற்சி செய்த டில்லி, சத்ராசல் மையத்தில் 10 வயதில் இணைந்தார். தனது 11 வயதில் பெற்றோர்களை இழந்தார். தாத்தா கண்காணிப்பில் வளர்ந்தாலும், பெரும்பாலான நாட்கள் பயிற்சி மையத்தில் வளர்ந்தார்.
ஒலிம்பிக் தனிநபர் போட்டியில் பதக்கம் வென்ற (2024, பாரிஸ், வெண்கலம்) இளம் இந்தியர் என சாதித்தார். தற்போது முதன் முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றியுள்ளார்.
அபிநயா, 19, (தடகளம்)
பதக்கம்: வெண்கலம்
தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள கல்லுாத்தை சேர்ந்தவர் அபிநயா. தந்தை ராஜராஜன், கல்குவாரி தொடர்பான பொருட்களை விற்கும் சிறு வியாபாரி. அபினயா பயிற்சிக்காக திருநெல்வேலிக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது. 100, 200 மீ., போட்டியில் பங்கேற்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆசிய உள்ளரங்கு போட்டியில் 60 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார். அப்போது தடுப்பு சுவரில் மோதி, முழங்கால், கணுக்காலில் பலத்த காயம் அடைந்தார். 5 மாதம் கடும் போராட்டத்திற்குப் பின், ஆசிய விளையாட்டில் 4X100 மீ., தொடர் ஓட்ட போட்டியில் மட்டும் பங்கேற்று, வெண்கலம் கைப்பற்றினார்.
பிரனவி, 23, (கோல்ப்)
பதக்கம்: தங்கம்
கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்தவர் பிரனவி அர்ஸ். 6 வயதில் கோல்ப் விளையாடத்துவங்கிய இவர், 17 வயதில் 2020ல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். 2025ல் மும்பையில் நடந்த தொடரில் வீரர்களுடன் பங்கேற்று, பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதித்தார்.
கடந்த 2023, ஆசிய விளையாட்டில் 13வது இடம் பெற்றார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட பிரனவி, கோல்ப் விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார்.
சுஜீத் கல்கல், 23, (மல்யுத்தம்)***
பதக்கம்: தங்கம்
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தை சேர்ந்தவர் சுஜீத் கல்கல். தந்தை தயானந்த், தேசிய அளவிலான மல்யுத்த வீரர். அவரது 'அட்வைஸ்' படி வளர்ந்தார் சுஜீத். தற்காப்பு, விரைவாக தாக்குவதில் வல்லவர். 23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உலக சாம்பியனாக உள்ளார். தற்போது, சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக 24 வெற்றியை பதிவு செய்த இவர், ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்றுள்ளார்.
