ADDED : பிப் 13, 2026 10:49 PM

புதுடில்லி: நியூசிலாந்தில் உள்ள குக் ஜலசந்தியை கடந்து சாதனை படைத்தார் இந்தியாவின் சதேந்திர சிங் லோஹியா.
இந்திய பாரா நீச்சல் வீரர் சதேந்திர சிங் லோஹியா 38, மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். குழந்தை பருவத்தில் வயிற்றுப்போக்கிற்கு சரியான சிகிச்சை இல்லாததால் இவரது இரண்டு கால்களும் செயலிழந்தன. கடந்த 2017ல், கடலில் நீச்சல் பயணத்தை துவக்கினார். பின், 2018, 2023ல் ஆங்கில கால்வாயை கடந்தார். தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் 11 முறை பங்கேற்ற இவர், 4 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் கைப்பற்றினார். மூன்று முறை சர்வதேச பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்ற இவர், ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றார். கடந்த 2024ல் இவருக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் சதேந்திர சிங் லோஹியா, நியூசிலாந்தில் உள்ள குக் ஜலந்தியை (23.6 கி.மீ.,) 9 மணி நேரம், 22 வினாடியில் கடந்தார். குக் ஜலந்தியை கடந்த முதல் ஆசிய பாரா நீச்சல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
