/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி: பைனல் கனவில் இந்தியா
/
ஜூனியர் ஹாக்கி: பைனல் கனவில் இந்தியா
ADDED : டிச 06, 2025 09:08 PM

சென்னை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அசத்தினால், பைனலுக்கு முன்னேறலாம்.
சென்னை, மதுரையில், ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் 14வது சீசன் நடக்கிறது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் (டிச. 7) இந்திய அணி, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனியை சந்திக்கிறது.
லீக் சுற்றில் சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து அணிகளை வீழ்த்திய இந்தியா, 100 சதவீத வெற்றி பெற்றது. அடுத்து நடந்த காலிறுதியில், 4-3 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பெல்ஜியத்தை தோற்கடித்தது.
தில்ராஜ் சிங் (5 கோல்), மன்மீத் சிங் (5), அர்ஷ்தீப் சிங் (4), ஷர்தானந்த் திவாரி (4), அஜீத் யாதவ் (3), அன்மோல் எக்கா (2), ரோசன் குஜுர் (2), லுவாங் (2), குர்ஜோத் சிங் (2), கேப்டன் ரோகித் (1) மீண்டும் கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம். காலிறுதியில், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய கோல்கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் அணிக்கு பலம்.
ஜெர்மனி அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, கனடாவை வீழ்த்தியது. அடுத்து நடந்த காலிறுதியில் 3-1 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பிரான்சை தோற்கடித்தது. அரையிறுதியில் மீண்டும் மிரட்ட முயற்சிக்கலாம்.
எகிப்து கோல் மழை
மதுரை, ரேஸ்கோர்ஸ் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடந்த 21-24வது இடத்துக்கான போட்டியில் கோல் மழை பொழிந்த எகிப்து அணி 8-2 என ஓமனை வென்றது. மற்றொரு போட்டியில் கனடா அணி 3-1 என, நமீபியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரியா, சீனா அணிகள் மோதிய 17-20வது இடத்துக்கான போட்டி 1-1 என 'டிரா' ஆனது. பின், ஆஸ்திரிய அணி 3-1 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வங்கதேச அணி 5-3 என, தென் கொரியாவை வென்றது.
மலேசியா அசத்தல்
சென்னையில் நடந்த 13-16வது இடத்துக்கான போட்டியில் மலேசிய அணி 7-3 என, சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 3-1 என, சிலியை வென்றது.
பின், 9-12வது இடங்களுக்கான போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 1-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

