மானவ்-மானுஷ் முன்னேற்றம்: டேபிள் டென்னிஸ் 'ரேங்கிங்கில்'
மானவ்-மானுஷ் முன்னேற்றம்: டேபிள் டென்னிஸ் 'ரேங்கிங்கில்'
ADDED : ஜூலை 13, 2026 11:20 PM

புதுடில்லி: உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 2வது இடத்துக்கு முன்னேறியது.
சர்வதேச போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ஐ.டி.டி.எப்.,) வெளியிட்டது. ஆண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி, 3390 'ரேட்டிங்' புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதல் முறையாக 'நம்பர்-2' இடம் பிடித்தது. இதன்மூலம் ஐ.டி.டி.எப்., தரவரிசையில் 2வது இடம் பிடித்த முதல் இந்திய ஜோடியானது. இதற்கு முன், 2022ல் வெளியான தரவரிசையில் இந்தியாவின் அர்ச்சனா கமத், மணிகா பத்ரா ஜோடி 4வது இடம் பிடித்திருந்தது.
முதலிடத்தில் சீனாவின் ஷிடோங் லின், யூஜெங் ஹுவாங் ஜோடி (5160 'ரேட்டிங்' புள்ளி) உள்ளது.
பெண்கள் இரட்டையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி (1431 புள்ளி), 10வது இடத்துக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா, மானுஷ் ஷா ஜோடி (2910) 5வது இடத்துக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடியான ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி (974), 14வது இடத்தில் நீடிக்கிறது.
