ADDED : ஆக 29, 2026 09:44 PM

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கிளப் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில், கிறிஸ்டல் பேலஸ், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதினர். எர்லிங் ஹாலண்ட் (17, 84வது நிமிடம்), ராயன் செர்கி (54, 59வது) தலா 2 கோல் அடித்து கைகொடுக்க மான்செஸ்டர் சிட்டி அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் சிட்டி அணியின் கோல்கீப்பர் ஜியான்லுாகி, ஒரு 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார்.
பைனலில் மெர்டென்ஸ்
மான்டேரி: மெக்சிகோவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., மான்டேரி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் 1-6, 6-4, 6-2 என, செக்குடியரசின் நிக்கோலா பார்டுன்கோவாவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் பிரான்சின் டியான் பாரி 7-6, 6-4 என அமெரிக்காவின் ஆன் லியை வென்றார்.
வில்லாரியல் அணி ஏமாற்றம்
மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் வில்லாரியல், டெபோர்டிவோ அலாவெஸ் அணிகள் மோதின. இதில் வில்லாரியல் அணி 0-1 என தோல்வியடைந்தது. டெபோர்டிவோ அணிக்கு லுாகாஸ் போயே ஒரு கோல் அடித்து கைகொடுத்தார்.
எக்ஸ்டிராஸ்
* சீனாவில், செப். 4-13ல் பெண்களுக்கான ஜூனியர் (21 வயது) ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் நடக்கவுள்ளது. இந்திய அணி 'எலைட்' பிரிவில் தென் கொரியா (செப். 5), மலேசியா (செப். 6), ஜப்பான் (செப். 8), சீனா (செப். 9) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
* கொல்கட்டா பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் மோகன் பகான் அணி (23 வயது) 3-1 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 9 போட்டியில், 6 வெற்றி, ஒரு 'டிரா', 2 தோல்வி என, 19 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
* ''இந்திய அணி, பிரேசில், உருகுவே அணிகளுக்கு எதிராக நட்பு கால்பந்து போட்டியில் விளையாட இருப்பது, ஒரு பார்வையாளராக சற்று பொறாமையாக இருக்கிறது. இந்தியாவுக்காக நான் விளையாடிய காலகட்டத்தில் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்ததில்லை,'' என, முன்னாள் இந்திய கேப்டன் பாய்ச்சங் பூட்டியா தெரிவித்துள்ளார்.
* புனேயில், இந்திய ஜூனியர் சர்வதேச பாட்மின்டன் கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில், இந்தியாவின் நிஷ்சால் சந்த் 18-21, 21-18, 21-16 என, சகவீரர் ஜக் ஷெர் சிங் கங்குராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தேவ் 15-21, 21-17, 21-13 என, சகவீரர் பிரனவ் மஞ்சுநாத்தை வென்றார். பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் கதா சூர்யவன்ஷி 15-21, 21-15, 21-18 என, தாய்லாந்தின் பட்டனனை வென்றார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் இஷிதா நேகி 21-14, 22-20 என, சகவீராங்கனை ரிஷிகா நந்தியை தோற்கடித்தார்.
