/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மனு பாகர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
/
மனு பாகர் 'வெண்கலம்': உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : பிப் 17, 2024 07:41 PM

கிரனாடா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') வெண்கலம் வென்றார்.
ஸ்பெயினில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (10 மீ., 'ஏர் ரைபிள்' / 'ஏர் பிஸ்டல்') தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ரிதம் சங்வான் (580 புள்ளி), மனு பாகர் (576) முறையே 1, 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர். அடுத்து நடந்த பைனலில் 215.1 புள்ளியுடன் 3வது இடம் பிடித்த மனு பாகர் வெண்கலம் கைப்பற்றினார். இது, உலக கோப்பை அரங்கில் மனு பாகர் வென்ற 5வது தனிநபர் பதக்கம். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் (111.4) 8வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் (581 புள்ளி) 9வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீரர்களான உஜ்வால் மாலிக் (579), ரவிந்தர் சிங் (573) ஆகியோரும் பைனலுக்கு தகுதி பெறவில்லை.
இத்தொடரில் இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் ஜார்ஜியா (ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம்), ஜெர்மனி (ஒரு தங்கம், ஒரு வெள்ளி) உள்ளன.