/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அதிசய ஜோதி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
/
அதிசய ஜோதி: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 12, 2024 10:03 PM

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் (1992, ஜூலை 25 - ஆக., 9) 25வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. சோவியத் யூனியன் சிதறிய நிலையில், ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து 'ஒருங்கிணைந்த அணி' என்ற பெயரில் பங்கேற்றன. மேற்கு, கிழக்கு ஜெர்மனி இணைந்த நிலையில், ஒன்றுபட்ட ஜெர்மனியாக களமிறங்கியது. 32 ஆண்டு தடைக்கு பின் தென் ஆப்ரிக்கா பங்கேற்றது சிறப்பம்சம். துவக்க விழாவில் 'பாரா' வில்வித்தை வீராங்கனை அன்டோனியோ ரிபல்லோ மிகவும் வித்தியாசமாக அம்பு மூலம் ஜோதியை ஏற்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா சார்பில் மைக்கேல் ஜோர்டான், மேஜிக் ஜான்சன், லேரி பேர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய கனவு அணி பங்கேற்றது. அனைத்து போட்டியிலும் சராசரியாக 44 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குரோஷியாவுக்கு எதிரான பைனலில் ஜோர்டானின் அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, அமெரிக்கா 117 - 85 என்ற -புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. ஆண்கள் ஹாக்கியில் ஏமாற்றிய இந்தியா, லீக் சுற்றோடு திரும்பியது.
'ஒருங்கிணைந்த அணி' 45 தங்கம், 38 வெள்ளி, 29 வெண்கலம் என 112 பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்தது. அடுத்த இரு இடங்களை அமெரிக்கா (37 தங்கம்), ஜெர்மனி (33 தங்கம்) கைப்பற்றின.