ADDED : ஜூன் 22, 2026 12:08 AM

ஆக்லாந்து: நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 2-0 என, நியூசிலாந்தை வென்றது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி 4வது சீசன் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன், 2022ல் நடந்த பைனலில் ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்திய சார்பில் நவ்னீத் கவுர் (4வது நிமிடம்), சுனேலிதா (15வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்ட நாயகி விருதை இந்தியாவின் லால்ரெம்சியாமி வென்றார். இம்முறை அதிக கோல் அடித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் தீபிகா ஷெராவத், அமெரிக்காவின் ஆஷ்லி சீசா முதலிடத்தை (தலா 6 கோல்) பகிர்ந்து கொண்டனர்.
இத்தொடரில் கோப்பை வென்றதன் மூலம் இந்திய பெண்கள் அணி, புரோ லீக் தொடரில் (2026-27) விளையாட தகுதி பெற்றது. கோப்பை வென்ற இந்திய அணியினருக்கு, ஹாக்கி இந்தியா சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீராங்கனைகளுக்கு தலா ரூ. 3 லட்சம், பயிற்சியாளர் குழுவினருக்கு தலா ரூ. 1.5 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
