sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

தங்கம் வென்றார் நவ்தீப்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில்

/

தங்கம் வென்றார் நவ்தீப்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில்

தங்கம் வென்றார் நவ்தீப்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில்

தங்கம் வென்றார் நவ்தீப்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில்


ADDED : செப் 08, 2024 12:47 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நவ்தீப் தங்கம் வென்றார். இந்தியாவின்ஹோகடோ செமா(குண்டு எறிதல்), சிம்ரன் (200 மீ., ஓட்டம்) வெண்கலம் கைப்பற்றினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்41) பைனலில் இந்தியாவின் நவ்தீப் பங்கேற்றார். அதிகபட்சமாக 47.32 மீ., எறிந்த நவ்தீப் சிங், 2வது இடத்தை உறுதி செய்தார். தவிர இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன் 44.29 மீ., எறிந்திருந்தார்.

அதிகபட்சமாக 47.64 மீ., எறிந்து முதலிடத்தை கைப்பற்றிய ஈரானின் பீட் சாயா சதேக், போட்டி முடிந்த பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 2வது இடம் பிடித்த நவ்தீப் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். இது, இம்முறை இந்தியாவுக்கு 7வது தங்கமானது.

சிம்ரன் வெண்கலம்: பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் (டி12) பைனலில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற்றார். பார்வை குறைபாடுள்ள இவருக்கு உதவியாளராக அபய் சிங் பங்கேற்றார். இலக்கை 24.75 வினாடியில் கடந்த சிம்ரன், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, பாராலிம்பிக்கில் இவரது முதல் பதக்கம்.கியூபாவின் துராந்த் எலியாஸ் ஒமாரா (23.62 வினாடி), வெனிசுலாவின் பவுலா (24.19 வினாடி) முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

செமா வெண்கலம்: ஆண்களுக்கான குண்டு எறிதல் (எப்57) பைனலில் இந்தியா சார்பில் ஹோகடோ செமா, சோமன் ராணா பங்கேற்றனர். இதில் அதிகபட்சமாக 14.65 மீ., எறிந்த ஹோகடோ செமா, வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, பாராலிம்பிக்கில் இவரது முதல் பதக்கம். தவிர இவர், தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். இதற்கு முன் 14.49 மீ., எறிந்திருந்தார்.

மற்றொரு இந்திய வீரர் சோமன் ராணா, 14.07 மீ., எறிந்து 5வது இடத்தை கைப்பற்றினார். தங்கம், வெள்ளிப்பதக்கத்தை முறையே ஈரானின் யாசின் கோஸ்ரவி (15.96 மீ.,), பிரேசிலின் பாலினோ டோஸ் சாண்டோஸ் தியாகோ (15.06 மீ.,) தட்டிச் சென்றனர்.

ராணுவ வீரர்

நாகாலாந்தின் திமாபூரில் பிறந்தவர் ஹோகடோ செமா 40. இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றினார். கடந்த 2002ல் ஜம்மு காஷ்மீரின் சவுகிபாலில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்ற போது கண்ணிவெடி வெடித்ததில் தனது இடத்து காலை இழந்தார். பின், பயிற்சியாளர் ராகேஷ் ரவாத் உதவியுடன் 2016 முதல் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்கிறார். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டில் வெண்லகம் கைப்பற்றினார்.

உ.பி., வீராங்கனை

உத்தர பிரதேசத்தின் (உ.பி.,) காசியாபாத் நகரை சேர்ந்தவர் சிம்ரன் சர்மா 24. பிறவியிலேயே பார்வைக்குறைபாடுடன் பிறந்தவர். ஆசிய பாரா விளையாட்டில் 2 வெள்ளி (100, 200 மீ., ஓட்டம்) வென்ற இவர், சமீபத்தில் ஜப்பானில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் (2024) போட்டியில் தங்கத்தை தட்டிச் சென்றார்.

ஹரியானாவை சேர்ந்தவர்

ஹரியானாவின் பானிபட் நகரில் பிறந்தவர் நவ்தீப் சிங் 23. குறைந்த உயரம் கொண்டவரான இவர், 2017ல் துபாயில் நடந்த ஆசிய யூத் பாரா விளையாட்டில் தங்கம் வென்றார். கடந்த 2021ல் உலக பாரா கிராண்ட் பிரிக்ஸ் தடகளத்தில் தங்கம் வென்ற இவர், சமீபத்தில் ஜப்பானில் நடந்த உலக பாரா தடகளத்தில் வெண்கலத்தை கைப்பற்றினார்.

நிறைவு விழா

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி கடந்த ஆக. 28ல் துவங்கியது. 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி நட்சத்திரங்கள் மனஉறுதியுடன் திறமை வெளிப்படுத்தினர். 12 நாள் விளையாட்டு திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. பாரிசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில், நிறைவு விழா நடக்க உள்ளது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு, ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்திய மூவர்ணக்கொடியை ஹர்விந்தர் சிங் (வில்வித்தையில் தங்கம்), பிரீத்தி பால் (100, 200 மீ., ஓட்டத்தில் வெண்கலம்) ஏந்தி வர உள்ளனர். நிறைவு விழா இயக்குநர் தாமஸ் ஜாலி கூறுகையில்,''துள்ளல் இசை, கலக்கல் நடனம் என ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானமே அதிரும். பிரபல பியானோ, வயலின் இசை கலைஞர்கள் அசத்த உள்னனர். விழா அரங்கம், நடன மேடையாக மாறும் அதிசயத்தை காணலாம்,'' என்றார். அடுத்த பாராலிம்பிக் போட்டி வரும் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ளது.



தங்கம் வென்ற தம்பதி

ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் (டி62) பைனலில் அமெரிக்காவின் ஹன்டர், இலக்கை 46.36 வினாடியில் எட்டி, தங்கத்தை தட்டிச் சென்றார். இது, இவரது 5வது பாராலிம்பிக் பதக்கம். ஏற்கனவே ஒரு வெள்ளி (2016ல் 200 மீ.,), 3 வெண்கலம் (2016, 2021ல் 400 மீட்டர், 2024ல் 4x100 மீ., ரிலே) வென்றிருந்தார்.

சமீபத்தில் ஹன்டரின் மனைவி தாரா டேவிஸ், பாரிஸ் ஒலிம்பிக் நீளம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் தாரா-ஹன்டர், பாரிசில் தங்கம் வென்ற தம்பதியாகினர்.

29 பதக்கம்

பாரிஸ் பாராலிம்பிக்கில் இதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கம் வென்றுள்ள இந்தியா, பதக்கப்பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது. இதில் தடகளத்தில் மட்டும் 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கம் கிடைத்துள்ளன.

ஈட்டி எறிதல்: பாவனா 5வது இடம்

பெண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்46) பைனலில் இந்தியாவின் பாவனாபென் அஜபாஜி சவுத்தரி பங்கேற்றார். அதிகபட்சமாக 39.70 மீ., மட்டும் எறிந்த இவர், 5வது இடத்தை கைப்பற்றினார். வியட்நாமின் டேனிலா மோரில்லோ (43.77 மீ.,) பாராலிம்பிக் சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றார்.

பவர்லிப்டிங்: கஸ்துாரி 8வது இடம்

பெண்களுக்கான பவர்லிப்டிங் 67 கிலோ பைனலில் தமிழகத்தின் கஸ்துாரி ராஜாமணி பங்கேற்றார். அதிகபட்சம் 106 கிலோ மட்டும் துாக்கிய இவர், 8வது இடம் பிடித்தார். சீனாவின் யுஜியாவோ டான் (142 கிலோ) உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.

சைக்கிளிங்: அர்ஷத், ஜோதி ஏமாற்றம்

ஆண்கள், பெண்களுக்கான சைக்கிளிங் ரோடு ரேஸ் (சி1-3) பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அர்ஷத் ஷேக், ஜோதி கடேரியா முறையே 28, 15வது இடம் பிடித்து ஏமாற்றினர்.

நீச்சல்: சுயாஷ் '5'

நீச்சல் போட்டிக்கான 50 மீ., பட்டர்பிளை (எஸ்7) தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுயாஷ் நாராயணன் ஜாதவ் பங்கேற்றார். தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்கில் (2016, 2021, 2024) பங்கேற்ற இவர், இலக்கை 33.47 வினாடியில் அடைந்து, 5வது இடம் பிடித்தார்.

படகு போட்டி: பிராச்சி ஆறுதல்

பெண்களுக்கான துடுப்பு படகு போட்டி (விஎல் 2, 'வா' பிரிவு தனிநபர் 200 மீ.,) அரையிறுதியில் இந்தியாவின் பிராச்சி, இலக்கை ஒரு நிமிடம், 05.66 வினாடியில் கடந்து பைனலுக்கு முன்னேறினார். இதில் ஏமாற்றிய இவர், 8வது இடம் (1 நிமிடம், 08.55 வினாடி) பிடித்தார்.

* ஆண்களுக்கான துடுப்பு படகு போட்டி (கேஎல்1, 'கயாக்' பிரிவு தனிநபர் 200 மீ.,) அரையிறுதியில் இந்தியாவின் யாஷ் குமார், 5வது இடம் (ஒரு நிமிடம், 02.03 வினாடி) பிடித்து வெளியேறினார்.






      Dinamalar
      Follow us