/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவில் ஒலிம்பிக் * 2036ல் நடத்த விண்ணப்பம்
/
இந்தியாவில் ஒலிம்பிக் * 2036ல் நடத்த விண்ணப்பம்
ADDED : நவ 05, 2024 11:28 PM

புதுடில்லி: ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டியை வரும் 2036ல் நடத்த இந்தியா சார்பில் விண்ணப்பம் அனுப்பப் பட்டுள்ளது.
உலகின் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்த இரு போட்டிகள் 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், 2032ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளன. இதனிடையே சமீபத்தில் மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி.,) 141 வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்,'' வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த ஆர்வமாக உள்ளோம்,'' என்றார். இதற்கு ஐ.ஒ.சி., தலைவர் தாமஸ் பாக் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
அடுத்து கடந்த செப்., மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் மோடி கூறுகையில்,''விரைவில் இந்தியா ஒலிம்பிக் நடத்துவதை பார்ப்பீர்கள். இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்,'' என்றார்.
தற்போது இந்தியா சார்பில் ஒலிம்பிக், பாராலிம்பிக் நடத்த விண்ணப்பம் தெரிவித்து, ஐ.ஒ.சி., போட்டி நடத்தும் இடங்களை தேர்வு செய்யும் குழுவிடம், முறைப்படி கடந்த அக். 1ல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்தில் போட்டி
கடைசியாக 2010ல் டில்லியில், காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. ஒருவேளை ஐ.ஒ.சி., அனுமதித்தால், குஜராத்தின் ஆமதாபாத்தில் ஒலிம்பிக் நடத்தப்படலாம். அப்போது யோக, கபடி, செஸ், கிரிக்கெட், கோ கோ, ஸ்குவாஷ் போட்டிகளை சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு எப்போது
ஐ.ஒ.சி., தலைவராக தற்போது தாமஸ் பாக் உள்ளார். புதிய தலைவருக்கான தேர்தல் 2025ல் நடக்க உள்ளது. இதன் பின் 2036ல் ஒலிம்பிக் நடத்தும் இடம் தேர்வு செய்யப்படும்.
காத்திருக்கும் சவால்
சவுதி அரேபியா, கத்தார், துருக்கி, 1988ல் சியோல் ஒலிம்பிக் நடத்திய தென் கொரியா நாடுகள், வரும் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. தவிர மெக்சிகோ, இந்தோனேஷியா, போலந்து, எகிப்தும் போட்டியில் உள்ளன. இதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
தேர்வு எப்படி
ஒலிம்பிக் நடத்த விருப்பம் தெரிவித்த இந்தியா, தற்போது முறைப்படி விண்ணப்பம் அனுப்பியுள்ளது. அடுத்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கும்.
* அப்போது, இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த உள்ள வாய்ப்புகள் குறித்து ஐ.ஒ.சி., சார்பில் ஆராயப்படும்.
* பின் போட்டி நடத்த தேவைப்படும் செலவு குறித்த ஏலத்தொகையை முறைப்படி சமர்பிக்க வேண்டும்.
* ஐ.ஒ.சி., போட்டி நடத்தும் இடங்களை தேர்வு செய்யும் குழு, இறுதி முடிவெடுக்கும்.
* கடைசியாக தேர்தல் நடத்தப்பட்டு, அதிக வாக்கு பெறும் நாடு, ஒலிம்பிக் வாய்ப்பை தட்டிச் செல்லும்.