/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி
/
ஒலிம்பிக் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி
ADDED : ஆக 15, 2024 10:44 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய நட்சத்திரங்களை, தனது இல்லத்தில் சந்தித்து பாராட்டினார் பிரதமர் மோடி.
பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா (வெள்ளி), ஹாக்கியில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலம் வென்றது.
துப்பாக்கிசுடுதலில் மனு பாகர் (2), சரப்ஜோத் சிங், ஸ்வப்னில், மல்யுத்தத்தில் அமன் ஷெராவத்தும் அசத்த, இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வென்றது.
நேற்று பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஒலிம்பிக் நட்சத்திரங்களை சந்தித்து பாராட்டினார்.
அப்போது இந்திய ஹாக்கி அணியினர், வீரர்கள் கையெழுத்திட்ட 'ஸ்டிக்' பரிசளித்தனர். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆன மனு பாகர், பிரதமர் மோடியிடம் தனது 'பிஸ்டல்' செயல்பாடு குறித்து எடுத்துக் கூறினார்.
மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், தனது கையெழுத்திட்ட ஜெர்சி பரிசளித்தார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியடைந்த பாட்மின்டன் வீரர் லக்சயா சென்னிடம், அவரது திறமை குறித்து கேட்டறிந்தார் மோடி. டோக்கியோவில் பதக்கம் வென்ற லவ்லினா (குத்துச்சண்டை), மீராபாய் சானு (பளுதுாக்குதல்) உள்ளிட்டோரும் பிரதமர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி:
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் பங்கேற்ற நட்சத்திரங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி. அவர்களது விளையாட்டு அனுபவங்களை கேட்டு அறிந்து, பாராட்டு தெரிவித்தேன்.
ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற ஒவ்வொரு வீரர், வீராங்கனையும் சாம்பியன் தான். உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும், விளையாட்டு வளர்ச்சிக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு தரும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
நீரஜ் சோப்ரா வரவில்லை
ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்து பதக்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்). டோக்கியோவில் தங்கம் (2021), பாரிசில் வெள்ளி (2024) கைப்பற்றினார். இவர் தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுகிறார். தற்போது மருத்துவ ஆலோசனைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். தவிர பாட்மின்டன் வீராங்கனை சிந்து என இருவரும் நேற்று பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
'பாராலிம்பிக்' வாழ்த்து
பிரதமர் மோடி கூறுகையில்,''பாரிசில் நடக்கவுள்ள பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் மிகப்பெரிய அணி பங்கேற்க உள்ளது. இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்,'' என்றார்.
இந்தியாவில் எப்போது
பிரதமர் மோடி கூறுகையில்,'' இந்தியாவில் 2036ல் ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்பது கனவு. இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.