
ஒலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற ஹூவாங்கிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சக வீரர் லியு யுசென்.
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் கலப்பு இரட்டையரில் சீனாவின் ஹூவாங் யாகியாங், ஜெங் சி வெய் ஜோடி பங்கேற்றது. லீக் சுற்றில் 3, 'நாக் அவுட்டில்' 3 என களமிறங்கிய 6 போட்டியிலும் இந்த ஜோடி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.
இதற்கான பதக்கம் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன், ஆண்கள் இரட்டையரில் பங்கேற்ற சீன வீரர் லியு யுசென், அங்கு வந்தார். இதைப் பார்த்த ஹூவாங் அவரது அருகில் சென்றார்.
உடனே ஹூவாங் முன் மண்டியிட்டு அமர்ந்த லியு யுயென், தனது காதலை வெளிப்படுத்தினார். இதைப்பார்த்து சற்று வியப்படைந்த ஹூவாங், சிறிது நேரம் அப்படியே நின்றார். பின், மகிழ்ச்சியுடன் காதலை ஏற்றுக்கொண்டார். உடனே தனது கையில் இருந்த மோதிரத்தை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார் யுசென்.
கடந்த வாரம் அர்ஜென்டினா 'ஹேண்ட்பால்' வீரர் பாப்லோ சைமனெட், நீண்ட நாள் தோழி, ஹாக்கி வீராங்கனை பிலார் கேம்பாயிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.