/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உயரே...உயரே டுப்ளான்டிஸ் 'தங்கம்' * * இரண்டு மாடி உயரம் பறந்து சாதனை
/
உயரே...உயரே டுப்ளான்டிஸ் 'தங்கம்' * * இரண்டு மாடி உயரம் பறந்து சாதனை
உயரே...உயரே டுப்ளான்டிஸ் 'தங்கம்' * * இரண்டு மாடி உயரம் பறந்து சாதனை
உயரே...உயரே டுப்ளான்டிஸ் 'தங்கம்' * * இரண்டு மாடி உயரம் பறந்து சாதனை
ADDED : ஆக 06, 2024 11:13 PM

பாரிஸ்: ஒலிம்பிக் போல் வால்ட் போட்டியில் உலக சாதனை படைத்த டுப்ளான்டிஸ், மீண்டும் தங்கம் வென்றார்.
சுவீடனை சேர்ந்தவர் அர்மாண்ட் டுப்ளான்டிஸ், 24. இவரது தந்தை கிரக் (அமெரிக்கா) சிறந்த போல் வால்ட் வீரர். இவரது தாய் ஹெலினா (சுவீடன்) வாலிபால், ஹெப்டாத்லான் வீராங்கனை. பெற்றோரை போல டுப்ளான்டிசும் தடகளத்தில் இறங்கினார். தந்தை பயிற்சி அளிக்க, போல் வால்ட் போட்டியில் ஜொலித்தார். தாய் வழியில் சுவீடனுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் (6.02 மீ.,) வென்ற இவர், மீண்டும் சாதிக்கும் இலக்குடன் பாரிசில் களமிறங்கினார்.
தங்கம் உறுதி
நேற்று பாரிசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடந்த போல் வால்ட் பைனலில் டுப்ளான்டிஸ் பங்கேற்றார். இதை காண சுவீடன் மன்னர் கார்ல், ராணி சில்வியா உட்பட 80,000 ரசிகர்கள் அரங்கில் திரண்டிருந்தனர். 'கார்பன் பைபரில்' தயாரான போல் வால்ட் உடன் வேகமாக ஓடி வந்த டுப்ளான்டிஸ் முதல் வாய்ப்பில் 5.70 மீ., தாவினார். பின் 6.00 மீ., (19.7 அடி) உயரம் தாவிய போது தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். மற்ற வீரர்களால் 6 மீ., அளவை நெருங்க முடியவில்லை. அமெரிக்காவின் சாம் கெண்ட்ரிக்ஸ் (5.95 மீ.,), கிரீசின் கராலிஸ் இமானுவேல் (5.90) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
உலக சாதனை
இதற்கு பின் சாதனை முயற்சிக்காக உயரத்தை அதிகரித்தார் டுப்ளான்டிஸ். 6.10 மீ., உயரத்திற்கு (20 அடி) தாவிய போது புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். பிரேசில் வீரர் தியாகோ பிரேஸ் (6.03 மீ., ரியோ, 2016) சாதனையை தகர்த்தார். இதற்கு பிறகும் டுப்ளான்டிசின் தாகம் தணியவில்லை. உலக சாதனை படைக்க முடிவு செய்தார். 6.25 மீ., தாவ முயற்சித்தார். முதல் வாய்ப்பில் இவரது கை பட்டதால் 'பார்' விழுந்தது. இரண்டாவது வாய்ப்பிலும் 'மிஸ்' செய்தார். மூன்றாவது வாய்ப்பில் 6.25 மீ., (20 அடி, 6 இன்ச்) உயரே தாவிய இவர், 9வது முறையாக உலக சாதனை படைத்தார். தனது முந்தைய உலக சாதனையை (6.24 மீ., வாண்டா டைமண்ட் லீக், சீனா, 2024 ) தகர்த்தார்.
கனவு நனவானது
கிட்டத்தட்ட இரண்டு மாடி கட்டட உயரத்திற்கு தாவி, ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார் டுப்ளான்டிஸ். இம்மகிழ்ச்சியில் அரங்கில் இருந்த தனது காதலியை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
டுப்ளான்டிஸ் கூறுகையில்,''சிறுவனாக இருக்கும் போது ஒலிம்பிக்கில் தங்கம் வென்று உலக சாதனை படைக்க வேண்டுமென கனவு கண்டிருக்கிறேன். அது நனவாகியுள்ளது. இது போன்று தருணம் என் வாழ்வில் மீண்டும் நிகழ வாய்ப்பு இல்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,'' என்றார்.