/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'பாரா' தடகளம்: இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு
/
'பாரா' தடகளம்: இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு
'பாரா' தடகளம்: இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு
'பாரா' தடகளம்: இந்தியா சாதனை: பிரதமர் மோடி பாராட்டு
ADDED : அக் 06, 2025 11:07 PM

புதுடில்லி: ''உலக பாரா தடகளத்தில் இந்திய நட்சத்திரங்கள் புதிய வரலாறு படைத்தனர்,'' என, பிரதமர் மோடி பாராட்டினார்.
டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடந்தது. இதில் அசத்திய இந்திய நட்சத்திரங்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என, 22 பதக்கம் வென்றனர். பதக்கப்பட்டியலில் 10வது இடம் பிடித்தது இந்தியா. முதலிடத்தை பிரேசில் (15 தங்கம், 20 வெள்ளி, 9 வெண்கலம்) தட்டிச் சென்றது.
உலக பாரா தடகள வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு 20 பதக்கங்களுக்கு மேல் கிடைத்துள்ளது. இதற்கு முன், கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியில் 17 பதக்கம் (6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றிருந்தது. இம்முறை இந்தியா சார்பில் சிம்ரன் சர்மா (100 மீ., ஓட்டத்தில் தங்கம், 200 மீ., ஓட்டத்தில் வெள்ளி), பிரீத்தி பால் (100 மீ., ஓட்டத்தில் வெள்ளி, 200 மீ., ஓட்டத்தில் வெண்கலம்) தலா 2 பதக்கம் கைப்பற்றினர்.
உலக பாரா தடகளத்தில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட செய்தியில், 'நமது பாரா தடகள நட்சத்திரங்களின் செயல்பாடு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த ஆண்டு நடந்த உலக பாரா தடகளம் மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட முதன்முறையாக 22 பதக்கம் கிடைத்துள்ளது. பதக்கம் வென்ற நமது நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். இப்போட்டியை டில்லியில் நடத்தியது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம்,' என, தெரிவித்திருந்தார்.