/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் மாரியப்பன் * பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்...
/
வெண்கலம் வென்றார் மாரியப்பன் * பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்...
வெண்கலம் வென்றார் மாரியப்பன் * பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்...
வெண்கலம் வென்றார் மாரியப்பன் * பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்...
ADDED : செப் 04, 2024 01:41 AM

பாரிஸ்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் கைப்பற்றினார் இந்தியாவின் மாரியப்பன்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மாரியப்பன், ஷரத் குமார், ஷைலேஷ் குமார் என மூன்று பேர் பங்கேற்றனர். மாரியப்பன் அதிகபட்சம் 1.85 மீ., உயரம் தாண்டி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பாராலிம்பிக்கில் இவர் வென்ற மூன்றாவது பதக்கமாக அமைந்தது. முன்னதாக 2016ல் தங்கம், 2020ல் வெள்ளி வென்றிருந்தார். ஷரத் குமார் 1.88 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
அஜீத் வெள்ளி
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் அஜீத் சிங், சுந்தர் சிங் குர்ஜார், ரின்கு பங்கேற்றனர். இதில் அதிகபட்சம் 65.62 மீ., துாரம் எறிந்த அஜீத் சிங், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். சுந்தர் சிங் (64.96 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
தீப்தி அபாரம்
பெண்களுக்கான 400 மீ., ஓட்டம் நடந்தது. உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். தகுதிச்சுற்றில் 55.45 வினாடி நேரத்தில் ஓடி, முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். நேற்று நடந்த பைனலில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 55.82 வினாடி நேரத்தில் ஓடிவந்து, வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார்.
நித்யஸ்ரீ கலக்கல்
பெண்களுக்கான பாட்மின்டன், எஸ்.எச்.6 பிரிவில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் நித்யஸ்ரீ சிவன், இந்தோனேஷியாவின் லினா மர்லினாவை சந்தித்தார். முதல் செட்டை நித்யஸ்ரீ, 21-14 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டை 21-6 என எளிதாக வென்றார்.
23 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் நித்யஸ்ரீ, 21-14, 21-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
அவனி 'ஐந்து'
பெண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 50 மீ., ரைபிள் 3 பொசிஷன் போட்டி நடந்தது. இதற்கான தகுதிச்சுற்றில் 'டாப்-8' இடம் பிடித்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற நிலையில், இந்தியா சார்பில் அவனி லெஹரா, மோனா அகர்வால் பங்கேற்றனர்.
அவனி லெஹரா, 1159 புள்ளி எடுத்து, 7வது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். மோனா அகர்வால் 1147 புள்ளி மட்டும் எடுக்க, 13வது இடத்துக்கு தள்ளப்பட்டு, பைனல் வாய்ப்பை இழந்தார்.
அடுத்து நடந்த பைனலில் அவனி லெஹரா, 420.6 புள்ளி எடுத்து ஐந்தாவது இடம் பெற்றார். இவர் ஏற்கனவே டோக்கியோவில் 2 (தங்கம், வெண்கலம்), இம்முறை 1 (தங்கம்) என 3 பதக்கம் வென்றிருந்தார். தற்போது 4வது பதக்கம் வெல்லும் வாய்ப்பு நழுவியது.
பாக்யஸ்ரீ ஏமாற்றம்
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியாவின் பாக்யஸ்ரீ, கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 7.28 மீ., துாரம் எறிந்தார். இவர் 5வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கன்சன் லஹானி, 10.06 மீ., துாரம் மட்டும் எறிய, 7வது இடம் தான் கிடைத்தது.
அசத்திய தமிழக வீராங்கனைகள்
பாராலிம்பிக் பாட்மின்டனில் இந்தியா 1 தங்கம் (நிதேஷ்), 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கம் கைப்பற்றியது. இதில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி (வெள்ளி), மணிஷா (வெண்கலம்), நித்யஸ்ரீ (வெண்கலம்) என மூன்று பேர் பதக்கம் வசப்படுத்தி அசத்தினர்.
வில்வித்தையில் அதிர்ச்சி
வில்வித்தையில் பெண்களுக்கான ரீகர்வ் பிரிவு போட்டி நடந்தன. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, துருக்கியின் யக்முரை சந்தித்தார். இதில் பூஜா 6-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இதில் சீனாவின் சன்யானை எதிர்கொண்டார். முதல் இரு செட்டை வென்ற பூஜா 4-0 என முந்தினார்.
அடுத்த மூன்று செட்டிலும் ஏமாற்றினார் பூஜா. முடிவில் இவர் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
20 பதக்கம்
பாராலிம்பிக் வரலாற்றில் அதிகபதக்கம் கைப்பற்றி வரலாறு படைத்தது இந்தியா. பாரிசில் இதுவரை இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கம் வென்றுள்ளது. முன்னதாக, 2021 டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கம் கைப்பற்றி இருந்தது.