/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
லட்சம் கனவு கண்ணோடு... லட்சியங்கள் நெஞ்சோடு * பாராலிம்பிக் இன்று ஆரம்பம் * ஜொலிக்குமா இந்தியா
/
லட்சம் கனவு கண்ணோடு... லட்சியங்கள் நெஞ்சோடு * பாராலிம்பிக் இன்று ஆரம்பம் * ஜொலிக்குமா இந்தியா
லட்சம் கனவு கண்ணோடு... லட்சியங்கள் நெஞ்சோடு * பாராலிம்பிக் இன்று ஆரம்பம் * ஜொலிக்குமா இந்தியா
லட்சம் கனவு கண்ணோடு... லட்சியங்கள் நெஞ்சோடு * பாராலிம்பிக் இன்று ஆரம்பம் * ஜொலிக்குமா இந்தியா
ADDED : ஆக 27, 2024 11:30 PM

பாரிஸ்: பாராலிம்பிக் போட்டி இன்று வண்ணமயமான விழாவுடன் ஆரம்பமாகிறது. மனஉறுதியுடன் வீரர், வீராங்கனைகள் சாதிக்க காத்திருக்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி இன்று துவங்குகிறது. -செப். 8ல் நிறைவு பெறுகிறது. 11 நாள் நடக்கும் இந்த விளையாட்டு திருவிழாவில், 169 நாடுகளை சேர்ந்த 4,400 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். துவக்க விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் (குண்டு எறிதல்) ஏந்தி வர உள்ளனர்.
துவக்க விழா புதுமை
பிரான்சின் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி லா கான்கார்ட் சதுக்கத்தில் துவக்க விழா நடக்க உள்ளது. இதன் இயக்குநர் தாமஸ் ஜாலி கூறுகையில்,''மாற்றுத்திறனாளிகள் உட்பட 150 நடன கலைஞர்களின் ஆடல், பாடல், 'லேசர் ஷோ' என புதுமையான நிகழ்ச்சிகளை காணலாம். மைதானத்தில் அல்லாமல், முதல் முறையாக திறந்தவெளியில் பாராலிம்பிக் துவக்க விழா நடக்க உள்ளது. 65,000 பேர் அமர்ந்து ரசிக்க உள்ளனர். பாராலிம்பிக் ஜோதி ஏற்றப்படும்,'' என்றார்.
பாராலிம்பிக் போட்டிகள் மனிதர்களின் மனஉறுதி, விடாமுயற்சியை நிரூபிக்கும் களம். விபத்தில் பாதிப்பு, பிறவியில் குறைபாடு, பார்வைதிறன் இல்லாதது என ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் வாழ்விலும் ஏதாவது ஒரு சோகம் புதைந்திருக்கும். இதிலிருந்து லட்சியத்துடன் போராடி முன்னேறியுள்ளனர். பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றனர்.
செர்னோபில் பேரழிவு
அமெரிக்க வீராங்கனை அக்சானா மாஸ்டர்ஸ், 35. இதுவரை பாராலிம்பிக், குளிர்கால பாராலிம்பிக்கில் 17 பதக்கம் வென்றுள்ளார். கையால் சைக்கிள் ஓட்டுதல், படகு வலித்தல், பனிச்சறுக்கு என பல போட்டிகளில் அசத்துபவர். உக்ரைனில் பிறந்தவர். செர்னோபில் அணு உலை வெடிப்பு கதிர்வீச்சு காரணமாக, இவருக்கு பிறவியில் குறைபாடு ஏற்பட்டது. சம அளவில் இல்லாத கால்கள், கட்டை விரல் இல்லாத கைகளுடன் பிறக்க, பெற்றோர் புறக்கணித்தனர். அனாதை இல்லத்தில் பல துன்பங்களை சந்தித்தார். அமெரிக்கர் ஒருவர் தத்தெடுக்க, வாழ்க்கை மாறியது. 14 வயதில் இவரது இரு கால்களும் முழங்காலுக்கு மேல் அகற்றப்பட்டன. பின் படகு வலித்தலில் ஜொலித்தார். பாரிசில் தனது பதக்க எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
உங்களை நம்புங்கள்
எகிப்தின் வலு துாக்கும் வீரர் ஷெரிப் ஒஸ்மான், 41. நான்காவது தங்கம் வெல்லும் கனவில் உள்ளார். 9 மாத குழந்தையாக இருந்த போது போலியோவால் பாதிக்கப்பட்டார். இவர் கூறுகையில்,'எனது தசைகளில் இருந்து பலம் கிடைப்பதில்லை. மனதில் இருந்து பலம் கிடைக்கிறது. உங்களை நம்பினால், கனவுகளை எட்டிப்பிடிக்கலாம்,'' என்றார்.
முதல் திருநங்கை
இத்தாலியின் 'வீல் சேர்' வாள் சண்டை வீராங்கனை பெபி வியோ 27. இளம் வயதில் 'மெனிங்கிட்டிஸ்' பாதிப்பு ஏற்பட, இவரது இரு கால்கள், கையின் முன் பகுதி அகற்றப்பட்டன. தொடர்ந்து மூன்றாவது தங்கம் வெல்லும் உறுதியுடன் உள்ளார்.
பாராலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற பெருமை பெறுகிறார் இத்தாலியின் வேலன்டினா பெட்ரில்லோ 50. இவரது 14 வயதில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் பங்கேற்பது கூடுதல் சிறப்பு.
தாக்கியது சுறா
அமெரிக்க நீச்சல் வீராங்கனை அலி டுரூவிட் வாழ்வில் விதி விளையாடியது. 2023, மே 24ல் கால்கோஸ் தீவுக்கு விடுமுறையை கொண்டாடச் சென்ற இவர், கடலுக்கடியில் நீந்திக் கொண்டிருந்தார். அப்போது சுறா மீன் ஒன்று இவரது இடது கணுக்கால் பகுதியை கடிக்க, ரத்தம் கொட்டியது. சுறாவிடம் இருந்து தப்பி, 225 அடி துாரத்திற்கு நீந்தி படகை எட்டினார். 'ஏர் ஆம்புலன்ஸ்' மூலம் மயாமி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். மே 31ல் இவரது 23வது பிறந்தநாளன்று முழங்காலுக்கு கீழே அகற்றப்பட்டது. இந்த சோதனையில் இருந்து மீண்ட இவர், பாரிசில் சாதிக்கும் இலக்குடன் உள்ளார்.
புதிய ஆட்டம்
'கோல்பால்', 'போக்சியா' என இரு விளையாட்டுகள் புதிதாக இடம் பெற்றுள்ளன. உள்ளரங்கு போட்டியான கோல்பாலில், பார்வை திறன் குறைந்தவர்கள் பங்கேற்பர். ஒலி எழுப்பும் பிரத்யேக பந்துகளை உருட்டி கோல் அடிக்க முயற்சிப்பர். 'போக்சியா' போட்டியில், வீல் சேரில் அமர்ந்தவாறு லெதர் பந்துகளை, 'ஜேக்' எனப்படும் சிறிய பந்துக்கு அருகே எறிய வேண்டும்.
முதன் முறையாக...
பாராலிம்பிக்கில் இந்தியா முதன் முறையாக 1968ல் (டெல் அவிவ்) பங்கேற்றது. இதில் 8 வீரர், 2 வீராங்கனை என 10 பேர் பங்கேற்றனர்.
* இந்தியாவின் முதல் பாராலிம்பிக் பதக்கம் தங்கமாக (1972) அமைந்தது. 50 மீ., பிரீஸ்டைல் (37.33 வினாடி) நீச்சலில் முரளிகாந்த், உலக சாதனையுடன் கைப்பற்றினார்.
* ஒரே பாராலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற முதல் இந்தியராக வலம் வருகிறார் ஜோகிந்தர் சிங் பேடி. இவர் 1 வெள்ளி (குண்டு எறிதல்), 2 வெண்கலம் (ஈட்டி, வட்டு எறிதல்) என 3 பதக்கம் (1984) வென்றார்.
* தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் தேவேந்திர ஜஜாரியா. 2004, ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்தார். தவிர 2016ல் தங்கம், 2021ல் வெள்ளி என 3 பதக்கம் வசப்படுத்தினார்.
* பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை தீபா மாலிக். 2016ல், குண்டு எறிதலில் வெள்ளி கைப்பற்றினார்.
* ஒரே பாராலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெஹரா. 2021ல் தங்கம், வெண்கலம் (துப்பாக்கிசுடுதல்) வென்றார்.
* பாராலிம்பிக் வில்வித்தையில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் ஹர்விந்தர் சிங் (2021ல் வெண்கலம்).
* 2021 பாராலிம்பிக்கில் அறிமுகம் ஆன பாட்மின்டனில் இந்தியாவின் பிரமோத், கிருஷ்ணா தங்கம் வென்றனர்.
* பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பவினா படேல் (2021ல் வெள்ளி).
* 2024ல் முதன் முறையாக அதிகபட்சம் 84 இந்திய நட்சத்திரங்கள் களமிறங்குகின்றனர்.
2021க்கு முன்...
கடந்த 2021க்கு முன் நடந்த பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா மொத்தம் 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் மட்டும் வென்றிருந்தது. கடந்த 2021 டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கம் குவித்தது. இம்முறை இந்த எண்ணிக்கை 25 ஆக உயரலாம்.
காத்திருக்கும் 'தங்கங்கள்'
பாராலிம்பிக்கில் இம்முறை இந்தியா குறைந்தது 25 பதக்கம் வெல்லும் என நம்பப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் இந்திய நட்சத்திரங்கள் சிலர்:
* மாரியப்பன்
உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் 29. தமிழகத்தின் சேலம் பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர். விபத்தில் சிக்கி வலது கால் பாதிக்கப்பட்டது. 2016 ரியோ பாராலிம்பிக்கில் தங்கம், 2021 டோக்கியோவில் வெள்ளி வென்றார். சமீபத்தில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் முதன் முறையாக தங்கம் வசப்படுத்தினார். தற்போது மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் களமிறங்கும் மாரியப்பன், இம்முறை தங்கம் வென்று திரும்ப காத்திருக்கிறார்.
* சுமித் அன்டில்
ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் 26. ஹரியானாவின் சோனிபட்டை சேர்ந்தவர். விபத்து காரணமாக இடது கால் கீழ்பகுதி இல்லை. 2021 டோக்கியோவில் உலக சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். இம்முறை குறைந்தது 75 மீ., துாரம் எறிந்து தங்கம் வெல்ல உள்ளார்.
* அவனி லெஹரா
துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெஹரா 22. ஜெய்ப்பூரை சேர்ந்த இவர், கார்விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டார். டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். இந்தியாவுக்கு மீண்டும் தங்கம் கொண்டு வரலாம்.
* பவினா படேல்
டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் 37. குஜராத்தை சேர்ந்தவர். போலியோ பாதிப்பு காரணமாக நடக்க முடியாது. கடந்த 2021ல் கலக்கினார். ஒலிம்பிக், பாராலிம்பிக் டேபிள் டென்னிசில் பதக்கம் (வெள்ளி) வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். மீண்டும் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.
* ஷீத்தல் தேவி
பாராலிம்பிக் வில்வித்தையில் பங்கேற்கும் இரு கைகள் இல்லாத முதல் வீராங்கனை ஷீத்தல் தேவி 17. ஜம்மு அண்டு காஷ்மீரை சேர்ந்தவர். இம்முறை அசத்தும் பட்சத்தில் பாராலிம்பிக் பதக்கம் வென்று முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை என சாதிக்கலாம்.