/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாதுகாப்பு வளையத்தில் பாரிஸ் * ஒலிம்பிக் நட்சத்திரங்கள் வருகை
/
பாதுகாப்பு வளையத்தில் பாரிஸ் * ஒலிம்பிக் நட்சத்திரங்கள் வருகை
பாதுகாப்பு வளையத்தில் பாரிஸ் * ஒலிம்பிக் நட்சத்திரங்கள் வருகை
பாதுகாப்பு வளையத்தில் பாரிஸ் * ஒலிம்பிக் நட்சத்திரங்கள் வருகை
ADDED : ஜூலை 18, 2024 11:03 PM

பாரிஸ்: ஒலிம்பிக் போட்டி துவங்க ஒருவாரம் மட்டும் உள்ள நிலையில் மத்திய பாரிஸ் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி வரும் 26ல் துவங்க உள்ளது. 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன.
இந்தியா சார்பில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என 117 பேர், 16 வகையான போட்டிகளில் களமிறங்க உள்ளனர்.
முதன் முறை
ஒலிம்பிக் துவக்கவிழா முதன் முறையாக மைதானத்துக்கு வெளியே நடத்தப்படுகிறது. 6 கி.மீ., துாரம் கொண்ட செய்ன் நதியில் வீரர், வீராங்கனைகள், நுாற்றுக்கணக்கான படகுகளில் அழைத்து வரப்பட உள்ளனர். பின் டிரொகேடெரோ மைதானத்தை அடைந்ததும், ஜோதி ஏற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். இதை நதியின் இரு கரைகள், வீடுகளில் இருந்து 5,00,000 பேர் கண்டு களிக்க உள்ளனர்.
பாதுகாப்பு எப்படி
இதனால் நேற்று முதல், ஜூலை 26 வரை என, 9 நாள் மத்திய பாரிஸ் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. துவக்க விழா நடக்கும் பாதையில் 10,000க்கும் மேற்பட்ட 'மெட்டல் ஷீட்' பாதுகாப்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
'QR' கோடு அனுமதி இருந்தால் இந்த தடுப்புகளை கடந்து செல்ல முடியும். 'பாஸ்' இல்லாதவர்கள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
தவிர பொது இடங்களில் மக்களை கண்காணிக்க 'ஏஐ' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது அங்குள்ள வசிக்கும் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துவக்கவிழா முடிந்ததும் இந்த தடைகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன.
நட்சத்திரங்கள் வருகை
இதனிடையே பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒலிம்பிக் நட்சத்திரங்கள் பாரிஸ் வரத் துவங்கினர். இவர்கள் பாரிசின் வடக்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்குகின்றனர்.
45,000 போலீசார்
துவக்கவிழா அன்று, மாலை நேரத்தில் வீரர், வீராங்கனைகள் 'ஈபிள் டவரை' நோக்கி நதியில் செல்வர். அப்போது, நதியிலும், கரையிலும் 45,000 போலீசார், பாரா ராணுவத்தினர், 10,000 சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
14,500 பேர்
ஒலிம்பிக் கிராமம் 54 'ஹெக்டேர்' நிலப்பரப்பில் மூன்று பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட நீர், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கட்டிட பொருட்கள், கார்பன் அளவு குறைந்த கான்கிரீட்டுகள் கொண்டு புதிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ளன. முற்றிலும் 'ஏசி' வசதி செய்யப்பட்டு இருந்தாலும், 2,500 போர்டபிள் 'ஏசி' வாங்கப்பட்டுள்ளன. 9,000 விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட மொத்தம் 14,500 பேர் தங்கும் வசதி உள்ளன.
தவிர, ஒலிம்பிக் கிராமத்தில் 6 'ரெஸ்டாரென்ட்' உள்ளன.
* மல்யுத்தம், பளுதுாக்குதல் உட்பட 7 விளையாட்டு பயிற்சி மையம் உள்ளன.
* ஒவ்வொரு அறையிலும் 2 பேர் தங்குவர். எனினும் 8 பேர் வரை தங்கும் வசதி உண்டு.
* ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவில் 80 சதவீத மைதானம் உள்ளன. இதனால் 30 நிமிடத்தில் மைதானம் செல்லலாம். இதற்காக 55 பஸ் வசதி உள்ளன.
* போட்டி முடிந்ததும் ஒலிம்பிக் கிராமம் 2,800 வீடுகளாக (2000 குடும்பத்தினர், 800 மாணவர்கள்) மாற்றப்பட உள்ளன.
500 வகை உணவு
வீரர், வீராங்கனைகளுக்காக 500 வகையான உணவுகள் ஒலிம்பிக் கிராமத்தில் தயாராக உள்ளன. இதற்கான 200 'செப்' பணியில் உள்ளனர்.
ஒரே நேரத்தில் 3,200 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி இங்கு உள்ளது. தினமும் 40,000 முறை உணவு பரிமாறப்பட உள்ளன.