தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பொன்மகளாய் ஜொலிக்கும் ஷீத்தல் தேவி: இரண்டு தங்கம் வென்றார்

பொன்மகளாய் ஜொலிக்கும் ஷீத்தல் தேவி: இரண்டு தங்கம் வென்றார்

பொன்மகளாய் ஜொலிக்கும் ஷீத்தல் தேவி: இரண்டு தங்கம் வென்றார்


ADDED : அக் 23, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ‘பாரா’ ஆசிய விளையாட்டு வில்வித்தையில் இரு கைகள் இல்லாத ஷீத்தல் தேவி, இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன.

கலப்பு அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் 19 வயது, இரு கைகள் இல்லாத வீராங்கனை ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி களமிறங்கியது. நேற்று நடந்த பைனலில் இந்தோனேஷியாவின் ஆயுதியா, கென் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 151–148 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.

அடுத்து நடந்த பெண்கள் ஒற்றையர் பைனலில் நடப்பு சாம்பியன் ஷீத்தல் தேவி, சிங்கப்பூரின் நுார் அலிமை சந்தித்தார். முதல் செட் மட்டும் (29–29) சமனில் முடிய, அடுத்த செட்டை ஷீத்தல் தேவி (26–30) இழந்தார். பின் சுதாரித்த இவர், தொடர்ந்து மூன்று செட்டுகளை (30–27, 30–27, 27–26) வசப்படுத்தினார். முடிவில் ஷீத்தல் தேவி, 142–139 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் தட்டிச் சென்றார்.

கடந்த 2023, 2026 என தொடர்ந்து இரு முறை பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையரில் தங்கம், பெண்கள் இரட்டையரில் வெள்ளி என, மொத்தம் 6 பதக்கம் வென்று சாதித்தார் ஷீத்தல் தேவி.

ஸ்வாதி வரலாறு



வில்வித்தை காம்பவுண்டு, வீல்சேர் பிரிவில் இந்தியா சார்பில் ஸ்வாதி சவுத்ரி பங்கேற்றார். பைனலில் ஸ்வாதி, சீனாவின் மெங்கன் மோதினர். இதில் ஸ்வாதி 4–6 என தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

பாரா ஆசிய விளையாட்டு வில்வித்தை, வீல் சேர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என ஸ்வாதி வரலாறு படைத்தார்.

தடகளத்தில் சோலைராஜ் கலக்கல்


‘பாரா’ ஆசிய விளையாட்டு தடகளத்தில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் (‘டி 44/62/64’) போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜ், 32, பங்கேற்றார். இவர் இரண்டாவது வாய்ப்பில் 7.15 மீ., நீளம் தாண்டி, புதிய ஆசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
* ஆண்களுக்கான 400 மீ., ‘டி 47’ ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய திலிப் காவிட், 48.27 வினாடியில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஏற்கனவே 100 மீ., ஓட் டத்தில் ( ‘டி 47’ ) அசத்திய இவர், நடப்பு போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் பவிக்குமார், இரண்டாவது இடம் பெற்றார். எனினும் இவர் ‘டிராக்’ மாறிய ஓடியது தெரியவர, வெள்ளிப்பதக்கம் நழுவியது.
* ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ‘டி 63’ பிரிவில் இந்தியா சார்பில் ஷைலேஷ் குமார், ராகுல் சரோஹா, வருண் சிங் பங்கேற்றனர். இதில் அதிகபட்சம் 1.89 மீ., உயரம் தாண்டிய ஷைலேஷ் குமார், புதிய பாரா ஆசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். வருண் சிங் (1.84), ராகுல் சரோஹா (1.81), அடுத்த இரு இடம் பெற வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றனர். இப்பிரிவில் மூன்று பதக்கங்களையும் இந்தியா வசப்படுத்தியது.
* பெண்களுக்கான 400 மீ., ‘டி 47’ பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் அஞ்சனாபென் களமிறங்கினார். பந்தய துாரத்தை 59.97 வினாடி நேரத்தில் கடந்த இவர், முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். இந்தியாவின் மற்றொரு வீராங்கனை ஜெயந்தி (1:00.65) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
* பெண்களுக்கான வட்டு எறிதல் எப் 54 பிரிவில் இந்தியாவின் சுவர்ணா ராஜ் பங்கேற்றார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 15.66 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.
* பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 400 மீ., ‘டி 12’ பிரிவில் இந்தியாவின் தேஜல்பென் (57.60 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 1500 மீ., ‘டி 11’ பிரிவில் ராவன்னி, வெண்கலம் கைப்பற்றினார்.
தடகளத்தில் மட்டும் நேற்று இந்தியா 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என இந்தியா 10 பதக்கம் வென்றது.



கபில் குமார் ‘வெள்ளி’


ஆண்களுக்கான நீச்சல், 400 மீ., பிரீஸ்டைல் ‘எஸ் 10’ பிரிவில் இந்தியா சார்பில் கபில் குமார் களமிறங்கினார். இவர் 4:38.44 நிமிட நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* ஆண்கள் 100 மீ., ‘பிரஸ்ட்ஸ்டிரோக்’ (‘எஸ்.பி.9’) நீச்சலில் இந்தியாவின் ஸ்வாதிக் பாட்டீல் (1:13.77 நிமிடம்) வெண்கலம் கைப்பற்றினார்.
* 50 மீ., ‘பிரீஸ்டைல்’ (‘எஸ் 13’) நீச்சலில் ரவி புதிகினா (25.89 வினாடி) வெண்கலம் பெற்றார். ஏற்கனவே 2 வெள்ளி வென்றிருந்த இவர், நடப்பு தொடரில் கைப்பற்றிய 3 வது பதக்கம் ஆனது.
* 100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ (‘எஸ் 7’) நீச்சலில் தேஜஸ் நந்தகுமார் (1:18.58 நிமிடம்) வெண்கலம் வென்றார். இதுவரை நீச்சலில் இந்தியா 3 வெள்ளி, 7 வெண்கலம் என 10 பதக்கம் வென்றுள்ளது.



பாட்மின்டனில் 7 வெண்கலம்


பாட்மின்டனில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் (‘எஸ்.யு.5’) அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ் (தமிழகம்) 21–19, 15–21, 13–21 என சக தமிழக வீராங்கனை துளசிமதியிடம் தோற்று, வெண்கலப் பதக்கம் பெற்றார். கலப்பு இரட்டையர் அரையிறுதியில் மணிஷா, பிரமோத் பஹத் ஜோடி (‘எஸ்.எல்.3, எஸ்.யு.5’) 21–16, 13–21, 17–21 என இந்தோனேஷிய ஜோடியிடம் போராடி தோற்று, வெண்கலம் வென்றது.
* கலப்பு இரட்டையரில் ‘எஸ்.எச் 6’ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நித்ய ஸ்ரீ (தமிழகம்), கிருஷ்ணா நாகர் ஜோடி, 14–21, 18–21 என இந்தோனேஷிய ஜோடியிடம் தோற்க, வெண்கலம் கிடைத்தது. ஒற்றையர் பிரிவில் நித்ய ஸ்ரீ, பைனலுக்கு முன்னேறினார்.
* தவிர, சுஹாஸ், அபிஜீத், சஞ்சனா குமாரியும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றனர். நேற்று மட்டும் பாட்மின்டனில் இந்தியாவுக்கு 7 வெண்கலம் கிடைத்தது.
* கலப்பு இரட்டையர் அரையிறுதியில் துளசிமதி (தமிழகம்), நிதேஷ் ஜோடி (‘எஸ்.எல்.3, எஸ்.யு.5’), 21–19, 14–21, 21–17 என சீன ஜோடியை சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தது.



25 பதக்கம்


பாரா ஆசிய விளையாட்டில் நேற்று இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கம் கைப்பற்றியது.



நீச்சல் வீரர் கைது


இந்திய பாரா நீச்சல் வீரர் முகமது ஷாம்ஸ் ஆலம் ஷேக், 40. கடந்த 2018ல் இரண்டு தங்கம் வென்றார். மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டில் பங்கேற்க சென்ற இவர், நகோயாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். அங்குள்ள துப்புரவு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள, ஜப்பான் போலீசார் ஆலமை கைது செய்தனர். தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆலம், உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படலாம்.



பதக்கப்பட்டியல்


பாரா ஆசிய விளையாட்டில் 21 தங்கம் உட்பட 89 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
‘டாப்–5’ நாடுகள்
‘ரேங்க்’ நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 150 79 85 314
2 ஜப்பான் 40 46 50 136
3 உஸ்பெகிஸ்தான் 38 41 41 120
4 இந்தியா 21 27 41 89
5 தென் கொரியா 21 23 26 70



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us