பிரக்ஞானந்தா, அர்ஜுன் ‘டிரா’: ‘டோட்டல்’ செஸ் தொடரில்
பிரக்ஞானந்தா, அர்ஜுன் ‘டிரா’: ‘டோட்டல்’ செஸ் தொடரில்
UPDATED : நவ 13, 2026 12:00 AM
ADDED : நவ 12, 2026 09:46 PM

புடாபெஸ்ட்: ‘டோட்டல்’ செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் தங்களது இரு போட்டிகளையும் ‘டிரா’ செய்தனர்.
ஹங்கேரியில் ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன், வைஷாலி உட்பட 24 பேர் பங்கேற்கின்றனர்.
வழக்கமான தொடர் போல இல்லாமல், ‘கிளாசிக்’ (தலா 45 நிமிடம்), ‘ரேபிட்’ (தலா 15 நிமிடம்), ‘பிளிட்ஸ்’ (தலா 3 நிமிடம்) என மூன்று பிரிவிலும் போட்டி நடக்கும். இதன் பரிசுத் தொகை ரூ. 6.1 கோடி.
முதல் நாளில் ‘பிளிட்ஸ்’ முறையில் போட்டி நடந்தன. இதன் முடிவுக்கு ஏற்ப, தலா 6 பேர் கொண்ட, 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். தற்போது ‘கிளாசிக்’ முறையில், போட்டிகள் நடக்கின்றன.
‘பி’ பிரிவில் உள்ள பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை சந்தித்தார். முதல் போட்டியை 44 நகர்த்தலில் ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா, அடுத்த போட்டியை 57 நகர்த்தலில் ‘டிரா’ செய்தார். 2 புள்ளியுடன் 4 வது இடத்தில் உள்ளார்.
‘டி’ பிரிவில் அர்ஜுன், அமெரிக்காவின் ஹன்ஸ் நைமான் மோதிய இரு போட்டியும் ‘டிரா’ ஆனது. இதே பிரிவில் உள்ள வைஷாலி, பிரான்சின் மேக்சிம் வாசியரை சந்தித்தார். முதல் போட்டியில் தோற்ற வைஷாலி, அடுத்த போட்டியை ‘டிரா’ செய்தார். அர்ஜுன் (2) 3வது, வைஷாலி (1) கடைசி இடத்தில் (6) உள்ளனர்.
