ADDED : நவ 02, 2024 09:49 PM

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 42-37 என உ.பி., அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் பாட்னா, உ.பி., அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி, முதல் பாதி முடிவில் 23-19 என முன்னிலை பெற்றிருந்தது. தொடர்ந்து அசத்திய பாட்னா அணியினர், உ.பி., அணி வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். பாட்னா அணிக்கு 19, உ.பி., அணிக்கு 18 புள்ளி கிடைத்தன. ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 42-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பாட்னா அணிக்கு தேவாங்க் (11 புள்ளி), அயன் (9) கைகொடுத்தனர். உ.பி., அணி சார்பில் ககன் கவுடா 9, பாரத் 6, கேப்டன் சுரேந்தர் கில், ஹிதேஷ் தலா 5 புள்ளி பெற்றுத்தந்தனர். பாட்னா அணி 5 போட்டியில், 3 வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. உ.பி., அணி (18 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறது. முதலிரண்டு இடங்களில் தமிழ் தலைவாஸ், புனே அணிகள் (தலா 19 புள்ளி) உள்ளன.