ADDED : ஆக 31, 2026 11:09 PM

மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், மலாகா அணிகள் மோதின. எம்பாப்வே, பெல்லிங்ஹாம் தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. வாலன்சியா அணி 1-0 என, டெபோர்டிவோ அணியிடம் வீழ்ந்தது. அத்லெடிக் பில்பாவோ அணி 2-0 என, செல்டா விகோ அணியை தோற்கடித்தது.
மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி
மான்செஸ்டர்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட், இப்ஸ்விச் டவுன் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் சுந்தர்லாந்து அணி 1-0 என, புல்ஹாம் அணியை வென்றது.
எக்ஸ்டிராஸ்
* உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடருக்கான (2027) தகுதிச் சுற்றின் 'பி' பிரிவு முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிரியாவை வென்றது. இந்திய அணி, வரும் செப். 3ல் உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.
* பின்லாந்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா பியூச்சர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் இந்தியாவுக்கு 6 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என, 16 பதக்கம் கிடைத்தது.
* செக்குடியரசில், டபிள்யு.டி.டி., 'பீடர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் அங்குர் பட்டாசார்ஜி 3-1 என சுலோவேனியாவின் டேனி கோசுலை வீழ்த்தினார். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் அங்குர், ஆகாஷ் பால் ஜோடி 3-1 என ஹங்கேரியின் சான்டோசி, போலந்தின் ஆலன் ஜோடியை வென்றது.
* சண்டிகரில், இந்திய விமான படை சார்பில் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நேற்று துவங்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உட்பட 6 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
