ADDED : ஆக 12, 2026 11:07 PM

லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. இவரது நீண்ட நாள் தோழியான அர்ஜென்டினா-ஸ்பானிஷ் மாடல் ஜார்ஜினா ரோட்ரிக்சை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமண நிகழ்ச்சியில் இவர்களது ஐந்து குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சமீபத்தில் 6வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்ற ரொனால்டோ, போர்ச்சுகல் அணிக்காக 233 போட்டிகளில் (146 கோல்) விளையாடி உள்ளார்.
பிரிட்டன் வீரருக்கு தங்கம்
பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காமில், முதல் முறையாக ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில், இலக்கை 10.09 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த பிரிட்டனின் ரோமல் கிளேவ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பிரிட்டனின் ஜெரேமியா அசூ (10.16 வினாடி), ஜெர்மனியின் ஓவன் அன்சா (10.19) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். இரண்டாம் நாள் முடிவில் 2 தங்கம், 2 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றிய பிரிட்டன், முதலிடத்துக்கு முன்னேறியது.
அரையிறுதியில் ரிபாகினா
டொரான்டோ: கனடாவில், பெண்களுக்கான 'நேஷனல் பாங்க்' ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். இதில் ரிபாகினா 4-6, 7-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் காயம் காரணமாக சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் விலக, அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
எக்ஸ்டிராஸ்
* நைஜீரியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. மூன்றாம் நாளில் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் கைப்பற்றிய இந்தியா, ஒட்டுமொத்தமாக 29 பதக்கம் (8 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலம்) வென்றுள்ளது.
* மும்பையில், ஆக. 16-26ல் ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது. இதில் 10 நாடுகளை சேர்ந்த 157 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மயங்க் சக்ரவர்த்தி, விக்னேஷ் அத்வைத், ஆதித்யா, அக்சய், சரண்யா தேவி உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
* மணிப்பூரின் இம்பாலில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில், நெரோகா அணி 3-1 என ரேங்டாய் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற ரேங்டாய் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
* உலக 'யூத்' தடகளத்தின் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற ஆஷிஸ் யாதவ் கூறுகையில், ''ஒலிம்பிக்கில் 2 பதக்கம் கைப்பற்றிய இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை சந்திக்க விரும்புகிறேன். அவருடன் என்னை சிலர் ஒப்பிடுவதை விரும்பவில்லை,'' என்றார்.
